ரூ. 500 கோடி லுங்கி வர்த்தகம் பாதிப்பு வாழ்வாதாரம் இழந்த 2 லட்சம் தொழிலாளர்கள்
by -கே.விஜயபாஸ்கர்பொது முடக்கம் காரணமாக ஈரோட்டில் ரூ. 500 கோடி அளவுக்கு லுங்கி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஈரோட்டில் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஆடை ரகங்களில் ஒன்று லுங்கி. லுங்கி உற்பத்தியில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் முதல் இடத்திலும், ஈரோடு இரண்டாம் இடத்திலும் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் லுங்கிகள் கேரளம், ஆந்திரம், கர்நாடகம், பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், இலங்கை, ஜிம்பாப்வே, துபை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
ஆர்டர்கள் கிடைக்கவில்லை: கரோனா பாதிப்பால் லுங்கி உற்பத்தி, விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள லுங்கி மொத்த விற்பனையாளர்கள் கரோனாவுக்கு முன்பு வாங்கி வைத்த லுங்கிகள்கூட அப்படியே இருப்பில் உள்ளன.
இது குறித்து, ஈரோட்டைச் சேர்ந்த லுங்கி உற்பத்தியாளார் கே.கே.பி.அருண் கூறியதாவது: ஈரோட்டில் வாரம் சுமார் 2 கோடி மீட்டர் அளவுக்கு லுங்கி உற்பத்தி நடைபெற்று வந்தது. இதில், குறைந்தபட்சம் 1 கோடி மீட்டர் விற்றுவிடும். பல வாரங்களில் 2 கோடி மீட்டரும் விற்பனையாகிவிடும். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள், சில வெளி நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
ரமலான் மாதத்தில் லுங்கி விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு மாதத்துக்கு முன்பே ஆர்டர்கள் பெற்று வட மாநிலங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருப்போம். இது தவிர ஈரோடு மார்க்கெட் மூலமாகவும் லுங்கி விற்பனை அதிக அளவுக்கு இருக்கும். ஆனால், கரோனா காரணமாக இந்த ஆண்டு ஆர்டர்கள் எதுவும் வரவில்லை. அப்படியே வந்திருந்தாலும் தறிகள் இயக்க முடியாது என்பதால் உற்பத்தி செய்ய இயலாது.
தற்போது விசைத்தறிகள் இயங்கத் தொடங்கி இருக்கின்றன. ஆனால், எங்களிடம் ஆர்டர்கள் இல்லை.
வாராந்திர சந்தை மூலமாக ரூ.25 கோடி நஷ்டம்: ஏற்கெனவே விசைத்தறிகள் இரவு நேரத்தில் இயங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் உற்பத்தி குறைந்துள்ளது. அத்துடன் பலருக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் மாதம் ரூ. 250 கோடி என்ற அளவில் ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி அளவுக்கு லுங்கி வர்த்தகம் இருக்கும். கடந்த இரண்டு மாதங்களாக லுங்கி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் ரூ. 500 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் உள்ள ஜவுளிச் சந்தைகளில் வாரம் சுமார் ரூ. 3 கோடி வரை லுங்கி வியாபாரம் நடைபெறும். ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜவுளிச் சந்தை கூடவில்லை. இதனால் வாராந்திர சந்தைகள் மூலமாக மட்டுமே இதுவரை சுமார் ரூ. 25 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் முற்றிலும் தொழில் நசிந்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர். வட மாநிலங்களில் ஏற்கெனவே துணிகள் கொடுத்து பணம் வசூல் ஆகாதவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இனிமேல் அந்த தொகை கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
கட்டுப்பாட்டில் முழுமையான தளர்வு: ஈரோடு நகரம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள சுமார் 2,000 லுங்கி உற்பத்தியாளர்கள், இந்தத் தொழிலை நம்பியுள்ள விசைத்தறி, சாய ஆலை, மடிப்பு தொழிலாளர்கள் என மொத்தம் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனர்.
கட்டுப்பாடு இல்லாமல் பேருந்து, ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்து இயங்கினால் மட்டுமே லுங்கி வர்த்தகம் மீண்டும் தொடங்கும். ரமலான் மாதத்துக்கு இணையாக தீபாவளி பண்டிகை காலத்திலும் கிராமப் பகுதிகளில் லுங்கி விற்பனை அமோகமாக இருக்கும்.
இந்த நிலையில், கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டால் மட்டுமே இந்த ஆர்டர்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.