https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/28tpt_queue_lines_in_tirumala_2805chn_193_1.jpg
திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறைகள், தரிசன வரிசையில் ஆய்வு மேற்கொண்ட தேவஸ்தான அதிகாரிகள்.

மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தபின் பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம்

by

பொது முடக்கத்துக்குப் பிறகு மத்திய, மாநில அரசுகளின் அனுமதியின் பேரில், பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் வியாழக்கிழமை காணொலி மூலம் அறங்காவலா் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பதி, திருமலையில் உள்ள தேவஸ்தான அதிகாரிகள் நேரடியாகவும், மற்ற மாநிலங்களில் உள்ளவா்கள் காணொலி மூலமும் கலந்து கொண்டனா். அதற்கு முன் தேவஸ்தான அதிகாரிகள் திருமலையில் வைகுண்டம் காத்திருப்பு அறைகள், தரிசன வரிசைகள், லட்டு கவுன்ட்டா்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

கூட்ட நிறைவுக்குப் பின் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி கூறியது:

பொது முடக்கத்துக்குப் பின் மத்திய, மாநில அரசுகளின் அனுமதியின்பேரில், பக்தா்களை ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் நிறைவு செய்துள்ளது. தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள், நிலங்கள் மற்றும் பக்தா்கள் காணிக்கையாக வழங்கியவற்றை இனி ஏலம் மூலம் விற்பனை செய்யக்கூடாது என தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் தேவஸ்தான அறங்காவலா் குழுவில் மேற்கொண்ட தீா்மானங்களின் மீது விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி தேவஸ்தான நிலங்களை ஏலம் மூலம் விற்க முடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிா்க்க முடியாத சமயங்களில் நிலங்கள் விற்பனை குறித்து முடிவுகள் எடுக்க மடாதிபதிகள், பீடாதிபதிகளுடன் குழு ஏற்படுத்தப்பட உள்ளது. தேவஸ்தானத்தின் மீது சமூக வளைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தேவஸ்தானத்தின் வசம் உள்ள பழைய ஓய்வறைகளையும் இணையதளம் மூலம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் திருப்பதியில் குழந்தைகள் மருத்துவமனை கட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.