வவுனியாவில் கிரவல் அகழ்வுப்பணியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்
by Theesan, Jeyapradheebaவவுனியா - கன்னாட்டி பெரியதம்பனை வீதியில் அமைந்துள்ள கிராம மக்கள் தமது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவல் அகழ்வுப்பணி காரணமாக 320ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மண் அகழ்வை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிய மகஜர் ஒன்றை செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் நேற்று கையளித்துள்ளதாக கன்னாட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 1977ஆம் ஆண்டு முதல் குடியிருந்த மக்களின் காணிகளில் முன்னர் வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலாளராக கமலதாசன் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்ற
கிரவல் அகழ்வுப்பணிகள் கிராம மக்களின் முயற்சியினால் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் எமது பகுதியில் கிரவல் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் அண்மையில் மக்கள் ஒன்றிணைந்து தமது எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளபோதிலும் கிரவல் அகழ்வுப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி கிராம அமைப்புக்கள் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தி இருந்தனர். மக்களின் எதிர்ப்புக்களை மீறியும் இங்கு கிரவல் அகழ்வுப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இதனால் இக்கிராமத்தை சூழவுள்ள ஐந்திற்கும் மேற்பட்ட குளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதனை நம்பி விவசாய நெற் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தமது நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ள முடியவில்லை.
இதனால் சுமார் 320ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது மக்களின் வாழ்வாதாரமான விவசாய செய்கையை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன் கிரவல் அகழ்வுப்பணியை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகஜரின் பிரதிகள் வடமாகாண ஆளுநர், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், கனிய வள அமைச்சு, நன்னீர் விவசாய அமைச்சு, கடற் தொழில் நீரியல்வள மற்றும் மூலகங்கள் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகம் கொழும்பு, வன பரிபாலனத்திணைக்களம், பறயனாளங்குளம் பொலிஸ் நிலையம், கன்னாட்டி கிராம அலுவலகர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறியுள்ளனர்.




