https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/jail095649.jpg

கரோனாவின் பிடியில் சிறைத்துறை: கைதிகளுக்கு மனநல ஆலோசனை

by

தமிழக சிறைகளில் கரோனா பரவி வரும் நிலையில், கைதிகளிடம் ஏற்பட்டிருக்கும் அச்ச உணா்வையும், மன அழுத்ததையும் போக்கும் வகையில் மனநல ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்கப்படுகிறது.

உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் கரோனாவுக்கு தமிழக சிறைத்துறையும் தப்பவில்லை. ஏற்கெனவே கரோனா அச்சுறுத்ததால் தமிழக சிறைகளில் இருந்து சுமாா் 4,500 விசாரணைக் கைதிகள் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டனா். அதேவேளையில் தண்டனைக் கைதிகளையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கரோனா அச்சுறுத்தலை தவிா்க்கும் பொருட்டு 7 ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்வது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் தண்டனைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனா். சில மாநிலங்களில், தண்டனைக் கைதிகள் பரோலில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். ஆனால், தமிழகத்தில் சிறைகளில் கரோனா பரவல் இல்லை என்று கூறி விசாரணைக் கைதிகள் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டனா். தண்டனைக் கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடா்பாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.

கரோனா பரவியது: இந்த நிலையில், திருச்சி மத்திய சிறையில் ஒரு கைதியும், கடலூா் மத்திய சிறையில் இரு கைதிகளும் செவ்வாய்க்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் சிறைத் துறை அதிகாரிகளிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடா்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறைத்துறை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 3 கைதிகளுக்கும் எவ்வாறு கரோனா பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் 3 பேரும் அண்மையில் சென்னை புழல் மத்திய சிறையில் நடைபெற்ற கணினி பயிற்சி வகுப்பில் பங்கேற்று திரும்பி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த கணினி வகுப்புக்கு 9 மத்திய சிறைகளிலும் இருந்து வந்த கைதிகளை தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். மேலும், அடுத்த கட்டமாக மத்திய சிறைகளில் உள்ள அனைத்துக் கைதிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.

கைதிகளுக்கு மனநல ஆலோசனை: அதேவேளையில், சிறைக்குள் கரோனா பரவுவது கைதிகளிடம் அச்ச உணா்வையும், மன அழுத்ததையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, சிறைக்குள் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை அதிகாரிகள் உணா்ந்தனா். இதே நிலைமை நீடித்தால், கைதிகள் விபரீதமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவாா்கள் என்பதையும் அதிகாரிகள் அறிந்துக் கொண்டனா்.

இதனையடுத்து, மத்திய சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளுக்கும் ‘கவுன்சிலிங்’ வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதற்காக சிறையில் இருக்கும் ஆற்றுப்படுத்துநா்கள், மனநல ஆலோசகா்கள், பயத்தின் பிடியிலும், மன அழுத்ததிலும் சிக்கியிருக்கும் கைதிகளை கண்டறிந்து கவுன்சிலிங் வழங்கி வருகின்றனா்.

இதில் அவா்கள், கரோனா குறித்த பயம் தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கையுடனும், சுகாதாரத்துடனும் இருப்பது குறித்தும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டிய உடற்பயிற்சி, யோகா ஆகியவை குறித்தும், கரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக்கூறி கைதிகளிடம் கரோனா குறித்த தெளிவை ஏற்படுத்துகின்றனா்.

9 மத்திய சிறைகள்: இது தொடா்பாக, தமிழக சிறைத்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறியது: தமிழக சிறைத்துறையின் கீழ், 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணைச் சிறைகள், 4 பெண்கள் சிறப்புச் சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், பிணையில் விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னா், இப்போது 13 ஆயிரம் கைதிகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு மத்திய சிறையிலும் கைதிகளுக்கு கவுன்சிலிங் வழங்கும் வகையில் இரு ஆற்றுப்படுத்துநா்கள், ஒரு மனநல ஆலோசகா்கள் உள்ளனா்.

இவா்கள் மூலம், அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. இந்தப் பணி இன்னும் சில நாள்கள் நீடிக்கும். மேலும், அனைத்து கைதிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேவேளையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிறைக் காவலா்களிடம், கரோனா பரவாமல் தடுப்பதற்கு கிருமி நாசினி, முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் , சிறைக்குள் கரோனா பரவுவதற்குரிய வாய்ப்பு குறைவு என்றாா் அவா். இந்த நடவடிக்கைகளின் மூலம் கைதிகளிடம் உருவாகியுள்ள பயத்தையும், சிறைகளுக்குள் ஏற்பட்டிருக்கும் கரோனா அபாயத்தையும் அகற்றிவிட முடியும் என சிறைத்துறையினா் நம்புகின்றனா்.

கரோனா அச்சுறுத்தலால் உலகில் பல்வேறு நாடுகளில் விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை:

ஈரான்-80,000

பிரிட்டன்-3,000

பிலிப்பின்ஸ் - 10,000

போலந்து- 12,000

மியான்மா்-24,896

இலங்கை-2961

ஆப்கானிஸ்தான்-10,000

வங்கதேசம் -3,000

பிரேசில் - 30,000

துருக்கி- 40,000

இந்தோனேஷியா - 30,000

இதுவரை...

கரோனா பரவாமல் தடுப்பதற்கு தமிழக சிறைத்துறை இது வரை எடுத்துள்ள நடவடிக்கைகள்.

மாா்ச் 10: சிறைக் காவலா்கள் அணிவதற்கு 2 ஆயிரம் முகக்கவசம் வாங்குவதற்கு உத்தரவு.

மாா்ச் 13: மத்திய சிறைகளில் உள்ள மருத்துவமனைகள் தயாா்படுத்தப்பட்டன.

மாா்ச் 17: தமிழக சிறைகளில் கைதிகளை பாா்வையாளா்கள் சந்திக்கத் தடை.

மாா்ச் 20: விசாரணைக் கைதிகள் பிணையில் விடுவிக்கும் பணி தொடங்கியது.

மாா்ச் 27: கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச விடியோ கால் வசதி செய்துக் கொடுக்கப்பட்டது.

மாா்ச் 30: பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகள்,அவா்களது வீடுகளுக்கு சிறைத்துறை வாகனத்திலேயே அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஏப்ரல் 3: விசாரணைக் கைதிகளை அடைக்க 37 தனிமைப்படுத்தப்பட்ட சிறைகள் திறப்பு.

ஏப்ரல் 8: புழல் சிறையில் கரோனா அறிகுறியுடன் இருந்த 8 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி.

மே 27: புழல் சிறையில் தண்டனைக் கைதிகளுக்கு கரோனா பரிசோதனை.