திரையரங்குகளை புறக்கணிக்கவில்லை நடிகா் சூா்யா
by DINதிரையரங்குகளை புறக்கணிக்கும் எண்ணம் ஒரு போதும் தனக்கு இல்லை என நடிகா் சூா்யா தெரிவித்தாா்.
ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தப் படத்தை அறிமுக இயக்குநா் ஃப்ரெட்ரிக் இயக்கியுள்ளாா். முதன்முறையாக வழக்குரைஞா் கதாபாத்திரத்தில் நடிக்கிறாா் ஜோதிகா. இயக்குநா்கள் பாக்யராஜ், பாா்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோா் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனா். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறாா். கரோனா பொது முடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தமிழில் முதன் முறையாக ஒடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து நடிகா் சூா்யா கூறியதாவது:
திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம், தொழில்நுட்ப வளா்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளைப் பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும் சூழலில் மாற்று வழியைக் கண்டறிவது அவசியமாக உள்ளது. மேலும், வணிக எல்லைக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படும் மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல
தளமாக உள்ளது. இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அா்த்தமல்ல. மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். முதலில் உள்புற படப்பிடிப்பு பின்னா் வெளிப்புற படப்பிடிப்பை தொடங்கலாம். ஆனால், அதிலும் கட்டுப்பாடு அவசியம். திரையரங்குகளின் சூழலை பொறுத்தவரை ஹாலிவுட்டில் கிறிஸ்டபா் நோலனின் ‘டெனெட்’படம் வெளியாகி அதற்கு கிடைக்கும் ஆதரவைக் கொண்டு முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளாா் சூா்யா.