ஆஸ்திரேலியாவில் முர்டோச் நிறுவனத்தின் 112 செய்தித் தாள்கள் இனி அச்சாகாது – மின்முரசு
ஏற்கெனவே நசிவை சந்தித்து வந்த இந்திய ஊடகத் துறையில் கொரோனா முடக்க நிலைக்குப் பிறகு ஆட்குறைப்பு குறித்த செய்திகள் தினசரி வெளியாகின்றன. தமிழ்நாட்டில்கூட சின்னஞ்சிறு செய்தித் தாள்கள் சில சத்தமில்லாமல் அச்சு வடிவத்தை நிறுத்திவிட்டு பிடிஎஃப் வடிவில் வாட்சாப் ஃபார்வார்டு மட்டும் செய்து வருகின்றன.
ஆனால், ஊடகத் துறைக்கு, குறிப்பாக அச்சு ஊடகத் துறைக்கு சிக்கல் என்பது இந்தியாவில் மட்டுமில்லை. உலக ஊடகத் துறையில் மிகப் பிரும்மாண்டமான முதலாளியான ராபர்ட் முர்டோச் நடத்தி வரும் அச்சு ஊடகங்களுக்கும் இதே பிரச்சனைதான்.
ஆஸ்திரேலியாவில் மட்டும் முர்டோச் நிறுவனம் நடத்தும் 112 செய்தித்தாள்கள் முற்றிலும் அச்சிடுவதை நிறுத்தப்போகின்றன. அடுத்த மாதம் முதல் இந்த நிறுவனத்தின் 76 பிராந்திய மற்றும் உள்ளூர் செய்தித் தாள்கள் இணைய தளத்தில் மட்டுமே வெளியாகும். அது தவிர 36 செய்தித் தாள்கள் முற்றிலும் நிறுத்தப்படும்.
நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா என்ற இந்த நிறுவனம் இந்த நடவடிக்கையால் நிச்சயமாக வேலைநீக்கம் நடைபெறும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், எவ்வளவு பேருக்கு வேலை போகும் என்று குறிப்பிடவில்லை.
இந்திய செய்தித்தாள்களுக்கு நேர்ந்த்தைப் போலவே, ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரஸ் முடக்க நிலை காரணமாக செய்தித் தாள்களின் விளம்பர வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஊடகத் துறை பெரும் சரிவை சந்திக்கிறது.
பிராந்திய செய்தித்தாள்கள்…
இந்த உலகத் தொற்று எப்படி தங்கள் வணிகத்தைப் பாதித்துள்ளது என்பதை நியூஸ் கார்ப் ஆபரேஷன் செயல் தலைவர் மைக்கேல் மில்லர் விளக்குகிறார். சமுதாய மற்றும் பிராந்திய வெளியீடுகளின் நீடித்து நிலைக்கும் திறனை கோவிட்-19 பாதித்துள்ளது என்கிறார் அவர்.
“இதைத் தொடர்ந்து, நுகர்வோர், வணிக நிறுவனங்களின் நகர்வு எதை நோக்கி இருக்கிறது என்பதில் கவனம் செலுத்தி, மாறுகிற போக்குகளுக்கு ஏற்ப நாங்கள் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியாவின் வடிவத்தை மாற்றியமைக்கிறோம். இந்த வடிவ மாற்றம் என்பது இந்த நிறுவனத்தை ஆஸ்திரேலியாவின் முன்னணி டிஜிடல் செய்தி ஊடக நிறுவனமாக உறுதிப்படுத்தும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த மூடல் திட்டத்தின் கீழ் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் ஹெரால்டு சன், தி டெய்லி டெலிகிராஃப் ஆகியவை மாநிலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும். பிராந்திய, சமுதாய பத்திரிகையாளர்கள் தரும் உள்ளடக்கங்களை இந்த செய்தித்தாள்கள் பயன்படுத்திக்கொள்ளும்.
தொடரும் மூடல்கள்
ஹோபர்ட் மெர்குரி, என்.டி. நியூஸ் போன்ற பெரிய பிராந்திய செய்தித் தாள்கள் தொடர்ந்து அச்சு வடிவத்திலேயே வெளியாகும்.
ரூபர்ட் முர்டோச்சின் உலக அளவிலான ஊடக சாம்ராஜ்ஜியத்தின் வேர்கள் ஆஸ்திரேலிய செய்தித் தாள்கள்தான். ஆனால், உலகின் பிற பகுதிகளில் நடப்பதைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் விளம்பரதாரர்கள் இணைய பகாசுர நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள் ஆகியவற்றை நோக்கிச் செல்வதால் கடந்த சில ஆண்டுகளாகவே பாரம்பரிய ஊடகங்கள் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுவருகின்றன.
கொரோனா உலகத் தொற்றுக் காலத்தில்ஆஸ்திரேலியாவின் பல ஊடக நிறுவனங்கள் ஊதிய வெட்டு, முற்றாக மூடல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. பஸ்ஃபீடு ஆஸ்திரேலியா, விஸ்காம் சிபிஎஸ் உரிமையாளராக இருந்து நடத்தும் டென் நெட்வொர்க் என்ற ஒளிபரப்பு நிறுவனத்தின் செய்தி இணைய தளமான 10 daily ஆகியவை சமீபத்தில் இத்தகைய பாதிப்பை எதிர்கொண்டவை.
முன்னதாக, ஆஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் என்ற 85 ஆண்டு பழைய செய்தி முகமை இந்த ஆண்டு தொடக்கத்தில் மூடப்பட்டது. இந்த நிறுவனத்துக்கும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பகுதியளவு உரிமையாளராக இருந்து நடந்திவந்தது.
ஆஸ்திரேலிய உள்ளடக்கங்களைப் பயன்படுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள் அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற கருத்தை முன்னின்று வலியுறுத்திவருகிறது நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com
Nila Raghuraman
Post navigation
மின்ஊடுருவாளர்கள் ஊடுருவல்…. நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் முடக்கம்லடாக் விவகாரம்: “நரேந்திர மோதி மகிழ்ச்சியாக இல்லை ” – டிரம்ப்
Related Posts

சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
murugan May 30, 2020 0 comment

சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
murugan May 30, 2020May 30, 2020 0 comment
