ஆவின் உற்பத்தி நிலையத்தில் இருந்து கோணிப்பையில் கொண்டு வருவதால் ஆவின் பால் சீக்கிரம் கெட்டுப்போகிறது: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
சென்னை: பால் டப்புகள் குறைவாக இருப்பதால் ஆவின் பாலை கோணிப் பையில் நிரப்பி லாரிகளில் குப்பை போல கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுகிறது என்று பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது. அதன் காரணமாக தனியார் நிறுவனங்களின் பாலினை விட தமிழக அரசின் ஆவின் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த சில மணி நேரங்களிலேயே கெட்டுப் போகின்ற நிலை தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. இதனால் பால் முகவர்கள் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆவின் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த சில மணி நேரங்களிலேயே கெட்டுப் போவதற்கு ஆவின் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கான செயல்பாடுகள் தான் காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் பால் கொள்முதல் தொடங்கி, பாக்கெட்டில் அடைத்து விநியோகத்திற்கு கொண்டு செல்வது வரை ஆவின் நிர்வாகம் மெத்தனப் போக்கோடு தான் நடந்து வருகிறது. எந்த அளவிற்கு நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது என்பதற்கு உதாரணமாக வேலூர் மாவட்ட ஆவின் நிர்வாகம் இருக்கிறது.
பொதுவாக பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அது சுகாதாரமான பால் டப்புகளில் அடுக்கி, குளிர்சாதன அறையில் குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்திற்கு இருப்பு வைக்கப்பட்டு அதன் பிறகு இன்சுலேட்டட் வாகனங்களில் ஏற்றி விநியோகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆவின் பால் பண்ணைகளில் பால் அடுக்கி விநியோகம் செய்யப்படும் டப்புகள் கடும் பற்றாக்குறையாக இருப்பதோடு, நிறைய டப்புகள் ஓட்டையாக இருக்கின்றன. அதனால் ஆவின் பால் பண்ணைகளில் இருந்து குப்பைகளை அள்ளிச் செல்வது போல் ஆவின் பாலினை விநியோக வாகனங்களில் அள்ளி கொட்டி எடுத்துச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி சில நேரங்களில் பால் பவுடர் மூட்டைகளின் காலி கோணிப் பைகளில் அள்ளிப் போட்டு கொண்டு வந்து விநியோகம் செய்கின்றனர். இதனால் ஆவின் பால் விரைவில் கெட்டுப் போய் விடுகிறது. எனவே, பாலினை சரியான குளிர் நிலையில் வைத்து பராமரித்து அதன் பிறகு இன்சுலேட்டட் வாகனங்கள் மூலம் மட்டுமே ஆவின் பாலினை விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.