http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__307232081890107.jpg

மேலும் 827 பேருக்கு தொற்று பரவல் கொரோனா எண்ணிக்கை 20,000 நெருங்கியது

*  வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,253 பேருக்கு தொற்று
*  சென்னையில் 559 பேர், இறப்பு 145

சென்னை: தமிழகத்தில் நேற்று 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 19,327 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,253 பேருக்கும், சென்னையில் நேற்று 559 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 145 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை மருத்துவமனையில் 10,548 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று மேலும் நேற்று 710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 559, செங்கல்பட்டு 45, கடலூர், நாகப்பட்டிணம், வேலூர், விருதுநகர் 2, காஞ்சிபுரம் 19, மதுரை 8, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, நெல்லை 1, சேலம் 7, திருவள்ளூர் 38, திருவண்ணாமலை 16, தூத்துக்குடி, விழுப்புரம் 3 என 710 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 117 பேர் என 827 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிறமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மூலம், வந்த 1,253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகாரஷ்டிராவில் இருந்து வருகிற அனைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆக உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 12,246 பேருக்கு சோதனை  செய்யப்பட்டுள்ளது. நோய் எண்ணிக்கை நம்பரை வைத்து யாரும் பயப்பட வேண்டாம், நம்பரை வைத்து அரசியல் பண்ண வேண்டாம். 24 மணி நேரம் மருத்துவர்கள் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ராயபுரம், புளியந்தோப்பு போன்ற பகுதிகளுக்கு செல்கிறோம். அப்போது யாரும் மாஸ்க் போடாமல் இருக்கின்றனர். அதிகாரிகளை பார்க்கும் போது மாஸ்க் போடுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் 3 மாதமாக கடுமையாக போராடிக் கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக 7 நோயாளிகளுக்கு பிளாஸ்மா டிரையல் கொடுக்கப்பட்டு அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குணமாகியிருக்கிறார்கள். அது பயன் உள்ளதாக இருக்கிறது. அதைப் போன்று ஐசிஎம்ஆரில் பாலிடெட் டிரையல் அனுமதி கிடைத்து அதற்கான மருந்து கொடுக்கப்பட்டவர் நலமாக இருக்கிறார்.  

மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை கடைசி நேரத்தில் கொண்டு வருகிறார்கள் எனவே தனியார் மருத்துவமனைக்கு சில ஆலோசனைகள் வழங்கி அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அரசுக்கு பணம் ஒரு பொருட்டல்ல ஒவ்ெவாரு உயிரும் முக்கியம். சாதாரண இருமல், சளி, காய்ச்சல் இருப்பவர்களுக்கு சோதனை செய்யப்படுகிறது. அதை 24 மணிநேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்கிறோம். மத்திய, மாநில அரசுக்கு தெரிவிக்கிறோம். அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை. ஆக்கப்பூர்வான கருத்துகளை கூறுங்கள் அரசு ஏற்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.