http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__589000880718232.jpg

தெலங்கானாவில் சோகம் 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு: 8 மணி நேர போராட்டம் வீண்

திருமலை: தெலங்கானாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா, சங்காரெட்டி மாவட்டத்தில் பாதான் செரு பகுதியை சேர்ந்தவர் கோவர்தன். இவரது மனைவி நவீனா. இவர்களது 3வது மகன் சாய்வர்தன்(3). கோவர்தன் குடும்பத்தினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மேதக் மாவட்டம், போட்சனாபல்லி கிராமத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தனர்.  அதேபகுதியில் கோவர்தனின் மாமா பிச்சாதிபதிக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. பிச்சாதிபதி தனது நிலத்தில் ஏற்கனவே 2 முறை ஆழ்துளை கிணறு தோண்டியும் தண்ணீர் வராததால், நேற்றுமுன்தினம் 3வது முறையாக 120 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். அதிலும் தண்ணீர் வராத நிலையில் மூடாமல் அப்படியே விட்டு இருந்தனர்.

இந்நிலையில், மாலை கோவர்தன் குடும்பத்தினர் நிலத்திற்கு சென்று சுற்றி பார்த்தனர். சிறுவன் சாய்வர்தன் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் திடீரென தவறி விழுந்தான். தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் மேதக் போலீசார் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 25 அடி ஆழத்தில் சாய்வர்தன் சிக்கிக்கொண்டான். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பைப் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும், ஐதராபாத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு கலெக்டர் தர்ம ரெட்டி, எஸ்பி சந்தனாதீப்தி, எம்எல்ஏ பத்மதேவேந்தர்  தலைமையில் விடிய, விடிய மீட்பு பணி நடந்தது. இதில் சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் 25 அடி தூரம் வரை பள்ளம் தோண்டப்பட்டு மீட்கும் பணி நடந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை 5.45 மணியளவில் சுமார் 8 மணி நேரம் போராட்டத்துக்கு பின் மீட்புக்குழுவினர்  சிறுவனை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.