35 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ‘பிரேக் டவுன்’ ஆனது போக்குவரத்து தொழில் ‘நகர’ வழிசெய்யாவிட்டால் போய்விடும் உயிர்
* வங்கிக்கடன் வெறும் வாய்ஜாலம் நஷ்டத்திலிருந்து மீள்வதே சிரமம்
பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்த கொரோனா ஊரடங்கு, சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து துறையினரை வஞ்சனையே இல்லாமல் வாட்டி வதைத்து விட்டது. கொரோனாவின் கோர தாண்டவத்தால், இந்த துறையை நம்பியுள்ள பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர். சரக்கு லாரி போக்குவரத்து மற்றும் பஸ் போக்குவரத்து நடத்துபவர்கள் கடும் நஷ்டத்தை அடைந்துள்ளனர். இந்தியாவில் மோட்டார் வாகனப் போக்குவரத்தை பொறுத்தவரையில் 65 சதவீதம் சரக்கு வாகனப்போக்குவரத்தாகவும், 35 சதவீதம் பயணம் சார்ந்த போக்குவரத்தாகவும் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இதில் சரக்கு வாகனப் போக்குவரத்தில் பிரதானமாக இருப்பது லாரிகள்தான். காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல், சிலிண்டர்கள், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள், உபகரணங்கள் போன்றவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் லாரிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடு முழுவதும் 85 லட்சம் லாரிகள், இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 4.50 லட்சம் லாரிகள் உள்ளன. சுமார் 1 லட்சம் லாரிகள் உள்ள சேலம்-நாமக்கல் மாவட்டம், தமிழகத்தின் லாரி கேந்திரம் என்ற பெருமையை பெற்றுள்ளது..
கொரோனாவுக்கு முன்பிருந்தே வாகன போக்குவரத்து துறை தள்ளாடிக் கொண்டுதான் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றம், சுங்க கட்டண உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, உதிரிபாகங்களின் விலையேற்றம், ஜிஎஸ்டி, புதிய மோட்டார் வாகனச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகள் என அரசின் பல்வேறு நடவடிக்கைகள் லாரித் தொழிலை சின்னாப்பின்னம் ஆக்கி விட்டன. இதிலிருந்து சிறிதேனும் மீள வழி கிடைக்குமா என்று யோசித்து முடிப்பதற்குள் கொரோனா தன் வேலையை காட்டிவிட்டது.
தற்போதைய நிலவரப்படி அத்தியாவசிய, உணவுப் பொருட்கள் விநியோக திட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரிகளை தவிர்த்து பார்த்தால் 90 சதவீத லாரிகள் இயங்கவில்லை. லாரிகள் முடக்கத்தால் தினமும் 2,200 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என அகில இந்திய மோட்டார் வாகன சங்க பொதுச் செயலாளர் நவீன்குப்தா சமீபத்தில் கூறியிருந்தார். இதுபோல், பஸ்போக்குவரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் மட்டும் 4,400 தனியார் ரூட் பஸ்கள் இயங்குகின்றன. 1,500 டூரிஸ்ட் பஸ்கள் உள்ளன. ஆம்னி பஸ்களும் அதிகளவில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் இவற்றின் இயக்கமும் நின்று விட்டது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 20 லட்சம் கோடி திட்டத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் மோட்டார் வாகன தொழில் மேம்பாட்டுக்கு, தனிப்பட்ட முறையில் எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை. வங்கியில் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பது மட்டும் பொத்தாம் பொதுவான அறிவிப்பாக உள்ளது. ஏற்கனவே வாங்கிய கடனை கட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், புதிய கடனை எப்படி தருவார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் மத்திய அரசின் அறிவிப்பு, வார்த்தை ஜாலமாக மட்டுமே இருக்கும் என்கின்றனர் தொழில்ஆர்வலர்கள். மேலும், தனியார் பஸ் இயக்கம் முடங்கி இரண்டரை மாதங்களுக்கு மேல் ஆகிறது.
மீண்டும் தொழிலுக்கு வர பஸ் பராமரிப்பு மட்டுமின்றி, தொழிலாளர்களை வேலைக்கு திரட்ட வேண்டியுள்ளது. கூலி கூட கொடுக்க முடியாத சூழலில் உள்ளோம். இதில், வங்கிகளில் வாங்கிய கடனுக்கு தவணைத்தொகையையும், அரசுக்கு வரிகளையும் செலுத்த வேண்டியிருக்கிறது. ஊடரங்கால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த மானியம், கடன் தள்ளுபடி போன்றவற்றை வழங்கினால்தான், முன்னேற்ற நிலைக்கு வர இயலும். மாறாக வங்கியில் கடன்களை மட்டும் கொடுத்தால் போதாது. மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள ₹20 லட்சம் கோடி திட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பலன் பெறும் வகையில் எந்த ஒரு அம்சமும் இல்லை. இதுதான் உண்மை நிலை’’ என்றனர்.
இந்தியா முழுவதும் 15 லட்சத்து 44 ஆயிரத்து 700 சாதாரண மற்றும் ஆம்னி பஸ்கள் ஓடுகின்றன. இதில் தனியார் பஸ்கள் 4 லட்சத்துக்கும் அதிகம். தமிழகத்தில் 6 ஆயிரம் தனியார் பஸ்கள் ஓடுகின்றன. இவற்றின் மூலம் 25,000 பேர் நேரடி வேலைவாய்ப்பையும், பிற வகைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மறைமுக வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். முடங்கிக் கிடக்கும் மோட்டார் வாகனத் தொழில் மீண்டுவர, குறைந்தது 3 மாதங்கள் தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வரிகளில் இருந்து விலக்கு, சுங்கக் கட்டணம் ரத்து, புதிய மோட்டார் வாகனச் சட்டத்திலிருந்து சில விலக்குகளை அளிக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது ஆயிரக்கணக்கான மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் மட்டுமன்றி, அதை சார்ந்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் கோரிக்கையாகவும் உள்ளது. விமான போக்குவரத்தில் கவனம் செலுத்தும் அரசு, பல ஆயிரம் ஏழை தொழிலாளர்களை நம்பியுள்ள சரக்கு வாகன, பஸ் போக்குவரத்து மற்றும் அதன் உப தொழில்கள் மீது கவனம் செலுத்தாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உதிரி பாக தொழில்களும் நசிந்தது அரசு கண்களுக்கு தெரியவில்லையா?
லாரியின் ஒவ்வொரு பாகமும், 10 தொழிலாளிக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. முகப்பு கட்டும் தொழில், மெக்கானிக் தொழில், கண்ணாடி பட்டறைகள், லாரிபட்டறைகள், டயர் ரீட்ரேடிங் பட்டறைகள், உதிரிபாக விற்பனையாளர்கள், லேத் பட்டறைகள், ஆயில் பட்டறைகள், கியர்பாக்ஸ் பட்டறைகள், பெயின்டிங் பட்டறைகள் என்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இதை நம்பியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட தொழில்துறையின் பாதிப்பு, மத்திய அரசின் பார்வையில் படாமல் போனது வேதனையானது என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
வண்டி ஓடல... வரி கட்ட பணமில்ல...
லாரி உரிமையாளர்கள் காலாண்டு வரியை செலுத்த வரும் ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2 மாதமாக லாரிகளே ஓடாத நிலையில், வருவாய் நின்று, பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. ஜூன் மாதம் காலாண்டு வரியை எப்படி கட்டுவது? என்று தெரியவில்லை. லாரிகளுக்கு 3 வது நபர் இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரித்து, அதற்கான கட்டணமும் கடந்த 5 மாதத்துக்கு முன்பு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது லாரிகள் இயக்கப்படாததால் எவ்வித சாலை விபத்தும் நடக்கவில்லை. எனவே இன்சூரன்ஸ் கட்டணத்துக்கு மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்கின்றனர் லாரி உரிமையாளர்கள்.
வட்டிய தள்ளுபடி பண்ணுங்க
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறுகையில், ‘‘தமிழகத்தில் புதிதாக 2 லட்சம் லாரிகள் நிதி நிறுவனங்களில் கடன் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த லாரிகளுக்கு இஎம்ஐ மூலம் கடன் செலுத்தப்பட்டு வந்த நிலையில், முதலில் 3 மாதங்களுக்கும், அடுத்து 3 மாதங்களுக்கும் கடனை செலுத்துவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அசலுடன், 6 மாதங்களுக்கான வட்டியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடனுடன் வட்டியைசெலுத்துவது எப்படி? என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதாக கூட மத்திய அரசு அறிவிக்கவில்லை’’ என்றார்.
தமிழகத்தில் மட்டும் ₹2,500 கோடிக்கு இழப்பு
கொரோனா ஊரடங்கு உத்தரவால், லாரித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ₹2,500 கோடி வரை லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம்தேதி முதல் தற்போது வரை 60 நாட்கள் கடந்து விட்ட நிலையில், லாரி போக்குவரத்து இதுவரை சகஜநிலைக்கு திரும்பவில்லை.
டீசல் விலையை கூட குறைக்கலேன்னா எப்படி?
லாரி உரிமையாளர்கள் சங்க வேலூர் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘தற்போது சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் 50 சதவீத லாரிகள் ஓடவில்லை. மாநில அளவில் லாரி உரிமையாளர்களுக்கு மட்டும் ₹15 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு எங்கள் தொழில் சகஜ நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் பிடிக்கலாம். 6 மாதங்களுக்கான சாலை வரியில் அண்டை மாநிலமான கர்நாடகம் 2 மாத வரிச்சலுகை வழங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் காலக்கெடுவை மட்டும் ஜூன் 30 வரை நீட்டித்துள்ளனர். மேலும் டீசல் விலையை ₹20 வரை குறைக்க முடியும். தமிழகத்தில் மத்திய அரசு வரியுடன் வாட் வரியையும் சேர்த்து லிட்டருக்கு ₹2.50 வசூலிக்கிறார்கள். அண்டை மாநிலங்களில் லிட்டருக்கு ₹4 வரை குறைவாக டீசல் கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.
டோல் கட்டணம் உயர்த்தியது என்ன நியாயம்?
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மளேன செயலாளர் வாங்கிலி கூறுகையில், ‘‘கடந்த 60 நாட்களுக்கு மேலாக லாரி போக்குவரத்து தொழில் முடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் 25 நாட்களில் லாரி போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை. அதன்பின்னர், 10 சதவீத லாரிகள் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வர இயக்கப்பட்டது. அப்படி இருந்தும் டோல் கட்டணம் உயர்த்தப்பட்டது. டீசல் விலை உயர்த்தப்பட்டது. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. லாரி உரிமையாளர்களின் முக்கியமான கோரிக்கைகளை, இக்கட்டான நேரத்தில் மத்திய அரசு கேட்காதது வேதனை’’ என்றார்.