மக்கள் அலட்சியத்தை கைவிட்டால் கொரோனாவை விரட்ட முடியும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் 40 சதவீதம் மக்கள் முகக் கவசம் அணிவதில்லை சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா நோயை விரட்ட முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 5 விழுக்காட்டினர், அதாவது ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்’’ என்று கூறியுள்ளனர். அவர்கள் அனைவரையும் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் சோதனை செய்து கண்டுபிடித்து, தனிமைப் படுத்தினால் மட்டும் தான் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், சென்னையில் இப்போது அதிக எண்ணிக்கையில் சோதனை நடத்தப்பட்டாலும் கூட, அது போதுமானதல்ல. இப்போதைய வேகத்தில் சோதனை நடத்தினால், ஒரு லட்சம் பேரையும் கண்டுபிடிக்க மாதக்கணக்கில் ஆகும். அதற்குள் அந்த ஒரு லட்சம் பேரிடமிருந்து இன்னும் பல லட்சம் பேருக்கு கொரோனா பரவி விடும் ஆபத்து உள்ளது. கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்காவிட்டால், ஜூன் மாதத்திற்குள் சென்னையில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்படாமல் இருப்பார்கள் என்றும், குறைந்தபட்சம் இறப்பு விகிதம் 0.7சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும் கூட 1400 பேர் உயிரிழப்பார்கள் என்பது வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.
சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகரிப்பது சாத்தியமானது தான். மற்றொருபுறம் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்படும் ஒத்துழைப்பும் போதுமானதல்ல. சென்னையில் 40 சதவீதம் மக்கள் முகக் கவசம் அணிவதில்லை சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சென்னையிலிருந்து கொரோனா நோயை விரட்ட முடியும்.