http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__418590724468232.jpg

பணி நீட்டிப்பு கோரி ஆசிரியர்கள் வழக்கு ஏப்ரலில் ஓய்வு பெற்றவர்களை பணியில் இருந்து விடுவிக்க தடை: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: பணி நீட்டிப்பு வழங்கக் கோரிய வழக்கில், ஏப்ரலில் ஓய்வு பெற்ற மனுதாரர்களை, பணியில் இருந்து விடுவிக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி  பட்டதாரி ஆசிரியர் ஜெயமங்கலம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் ஏப்.30ல் பணி ஓய்வு பெறவேண்டும். எனக்கு மே 31 வரை பணி நீட்டிப்பு  வழங்கப்பட்டது. இதனிடையே, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 59 வரை  உயர்த்தி தமிழக அரசு மே 7ல் அரசாணை வெளியிட்டது. இதனால், மே 31ல் வழக்கமாக  ஓய்வு பெறுவோர் பலனடைவர்.

என்னைப் போன்று ஏப். 30ல் ஓய்வு பெற்று, பணி  நீட்டிப்பு பெற்றவர்களுக்கு எந்த பலனும் இல்லை. பணி நீட்டிப்பு வழங்கும்  அரசாணை பாரபட்சமாக உள்ளது. மே 31ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை  ரத்து செய்து, ஏப். 30ல் ஓய்வு பெற்றவர்களுக்கும் தமிழக அரசின் ஓய்வு  நீட்டிப்பை வழங்க உத்தரவிட வேண்டும். என்னை மே 31ல் பணியிலிருந்து  விடுவிக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதேபோல் ஆசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், ஜவஹர், பார்வதி, சிவசங்கர் உள்ளிட்ட 7 பேர் தனித்தனியே மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஜெ.நிஷாபானு நேற்று வீடியோ கான்பரன்சிங்கில் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘ஏப்ரலில்  ஓய்வு பெற்ற யாருக்கும் ஓய்வூதிய பணப்பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை.  ஓய்வூதிய விபரங்கள் கூட அரசுக்கு அளிக்கப்படவில்லை. அரசாணை வெளியிடும்போது  கூட பணியில்தான் உள்ளனர். கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள அரசின் நிதி  நெருக்கடி மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதாக  கூறுகின்றனர். அரசின் முடிவு அரசு ஊழியர்களை பாகுபடுத்தி பார்க்கும்  வகையில் உள்ளது. எனவே, அரசின் முடிவை அனைவராலும் ஏற்க முடியாது’’ என்றார்.

அரசுத் தரப்பில் பதிலளிக்க உரிய காலஅவகாசம் வேண்டும் என கூறப்பட்டது. இதை  ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘மனுதாரர்களை மே 31ல் பணியில் இருந்து விடுவிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அவர்கள் பணியில் தொடர வேண்டும். அவர்களது சம்பளம் உள்ளிட்ட  பணப் பலன்கள் தொடர்பான நடவடிக்கைகள் வழக்கின் இறுதி உத்தரவை பொருத்தது. இந்த மனுவிற்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீரமைப்புத்துறை தலைமை செயலர்,  பள்ளி கல்வித்துறை கமிஷனர் மற்றும் இயக்குநர் உள்ளிட்டோர் தரப்பில் விரிவான  பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன்  3க்கு தள்ளி வைத்தார்.