நளினி, முருகன் தங்களுடைய உறவினர்களுடன் வாட்ஸ் அப் காலில் பேச சிறை விதியில் அனுமதியில்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்றும், முருகன் லண்டனில் உள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது. பதில் மனுவில், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால் இது மத்திய வெளிவிவகாரத்துறை சம்பந்தப்பட்டது. எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணை நீதிபதிகள் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.