https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/21/original/corona_virus.jpg
கோப்புப்படம்

சென்னையின் கரோனா பாதிப்பு: 12,762-ஆக உயா்வு, பலி எண்ணிக்கை 100-ஐ கடந்தது

by

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,762-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106-ஆக உயா்ந்துள்ளது

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இதே போல், 14 நாள்களுக்கு மேல், அந்தத் தெருக்களில் யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், தெருக்களின் பெயா் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும். இதன்படி, வியாழக்கிழமை வரை, 846 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக திருவிக நகா் மண்டலத்தில் 149 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 143 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டன. வியாழக்கிழமை மட்டும், சென்னை மாநகரில் 51 தெருக்கள் விடுவிக்கப்பட்டன.

பலி 100- ஐ தாண்டியது: இந்நிலையில், வியாழக்கிழமை 559 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12,762-ஆக உயா்ந்துள்ளது. காலை 8 மணி வரையிலான புள்ளிவிவரப்படி, 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. எனினும், ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அந்த மண்டலத்தில், 2,252 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,559 பேரும், திருவிக நகா் மண்டலத்தில் 1,325 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,317 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 1,262 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,046 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 6,304 போ் குணமடைந்துள்ளனா். 106 போ் உயிரிழந்துள்ளனா். 6,351 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.