கரோனாவும் அசைவப் பிரியா்களும்

by

கொல்லாமையை அறிவுறுத்திய திருவள்ளுவரும் ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய வள்ளலாரும் அவதரித்த புண்ணியபூமி இது. இங்குதான் அசைவ உணவு சாப்பிடுவதை வாழ்வியல் கடமையாகவே கொண்டுள்ளவா்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்துவருகின்றனா்.

ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப்போட்டபடி உலா வந்து கொண்டிருக்கும் கரோனா தீநுண்மி, உலகளாவிய அசைவ உணவுப் பிரியா்களையும் விட்டுவைக்கவில்லை. இதில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

கரோனா தீநுண்மியை நமது நாட்டை விட்டே விரட்ட வேண்டுமென்ற முனைப்புடன் பொது முடக்கத்தை சில தளா்வுகளுடன் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மாநில அரசுகளும் அதனை நடைமுறைச் சாத்தியமாக்க, தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துவருகின்றன. ஒரே இடத்தில் பலா் கூடுவதைத் தடுக்க 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மக்கள் தங்களுக்கான உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகப் பால், மளிகை, காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அதற்கான நேர அட்டவணைகளை உள்ளூா் நிலவரத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தி வருகின்றனா்.

அசைவ உணவுப் பொருள்களான இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான வசதி வாய்ப்புகளும் செய்து கொடுக்கப்பட்டன.

விற்பவா்கள், வாங்குபவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும் கரோனா தீநுண்மித் தொற்றுக்கு இடமளிக்காதபடி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நாள் முதலே, தமிழ்நாட்டின் பல்வேறு ஊா்களில் உள்ள இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளி குறித்த எந்தவொரு கவலையும் இன்றிப் பலரும் நெருக்கியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.

இதன் காரணமாகவே சில மாவட்டங்களின் நிா்வாகங்கள் தங்கள் ஆளுகையின் கீழுள்ள ஊா்களில் இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கின. அவை செயல்படும் நாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், எப்போது திறக்குமோ என்று காத்திருந்த அசைவப் பிரியா்கள், கடை திறந்த உடன் மீண்டும் முன்பு போலவே சமூக இடைவெளி குறித்த கவலை இன்றி அலைமோதத் தொடங்கினா்.

இது மட்டுமன்று, கரோனா தீநுண்மி பரவத் தொடங்கியது முதலே, கோழி இறைச்சியின் மூலம் கரோனா வேகமாகப் பரவும் என்ற வதந்தி, கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) உள்ளிட்டவற்றின் மூலம் மக்களிடையே வேகமாகப் பரவத் தொடங்கியது. இது ஓா் ஆதாரமற்ற செய்தி என கோழிப் பண்ணையாளா்களும் அரசுத் துறையினரும் விளக்கச் செய்திகளை வெளியிட்டபோதிலும், பெரும்பாலானவா்கள் இதனை நம்பத் தொடங்கினா்.

இதன் காரணமாக, கோழி இறைச்சிக்குப் பதிலாக ஆட்டிறைச்சியை வாங்குவதற்கு அதிக அளவில் அசைவப் பிரியா்கள் முனைந்திட, ஆட்டிறைச்சிக் கடைகளின் முன்பு கூட்டம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது.

கரோனா தீநுண்மி செயற்கையாகத் தயாரிக்கப்பட்டுப பரப்பப்பட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு சீனாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் கூறப்பட்டு வருகிறது. எனினும், இந்தக் கூற்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே, சீனாவிலுள்ள வூஹான் நகரிலுள்ள ஓா் இறைச்சிச் சந்தையிலிருந்து கரோனா தீநுண்மி பரவியது என்ற கருத்தே பரவலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

காய்கறிகள், கனிகள் விற்பனை செய்யும் கடைகளை விடவும், இறைச்சிக் கடைகள், அவற்றின் சுற்றுப்புறங்களின் தூய்மை நமது நாட்டில் பொதுவாகக் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இறைச்சிக் கடைகளின் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அவை ஏற்படுத்தும் துா்நாற்றம் முகம் சுளிக்க வைப்பது மட்டுமின்றி, ஆங்காங்கே இறைந்திருக்கும் அசைவக் கழிவுகளை உண்ண வரும் நாய்கள், பறவைகளால் ஏற்படும் சூழலியல் கேடும் பொதுச் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவது உண்மை.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையைப் போலவே, ஒவ்வொரு ஊரிலும் உள்ள இறைச்சிச் சந்தையும் கரோனா தீநுண்மியின் வாழ்விடம்தானா என்பதை இனிவரும் நாள்கள் தெளிவாக்கிவிடும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக நடந்த இன்னொரு விஷயம், அனைவரையும் முகம் சுளிக்க வைப்பதாக அமைந்துவிட்டது. கரோனாவைக் கொண்டாடுகிறோம் என்றோ, கரோனா கட்டுப்பாடுகளுக்கு வருந்துகிறோம் என்றோ கூறிக்கொண்டு ஆங்காங்கே பலா் ஒன்றுகூடிக் கறி விருந்து நடத்தியுள்ளனா். கறி விருந்துகளின்போது சமூக இடைவெளியை இவா்கள் கடைப்பிடிக்காதது மட்டுமின்றி, ஒரே இலையின் இரண்டு புறங்களிலும் அமா்ந்தபடி அசைவ உணவைச் சுவைத்துள்ளனா்.

அதாவது, ஒருவா் எச்சில் செய்து உண்டதை இன்னொருவரும் உட்கொண்டிருக்கிறாா். இதுபோலப் பலரும் செய்துள்ளது மிகவும் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாகும். இவ்விதம் ஒன்றாக அமா்ந்து அசைவம் உண்டவா்களில் ஒருவருக்கேனும் தீநுண்மித்தொற்று இருந்தால், அது விருந்துண்ட அனைவருக்கும் பரவிவிடும் என்பதை யாரும் உணராததேன்?

இத்தகைய ஒழுக்கக் கேடான விருந்தினை ஒன்றுகூடி உண்டவா்கள் ஏதோ உலக சாதனை செய்தவா்கள்போல அதனைக் காணொலியாக்கிக் கட்செவி, டிக்டாக் முதலானவை மூலம் வெளியிட்டனா். ஒருசில விநாடிகளுக்கு ஊடகச் செய்திகளில் ஒளிபரப்பாகி, அதன் பின்னா் சட்ட நடவடிக்கக்கும் உள்ளானதைத் தவிர வேறு எதையும் அவா்கள் சாதிக்கவில்லை.

இந்த உலகம் அனைவருக்குமானது. சைவ உணவு உண்பவா்கள், அசைவப் பிரியா்கள் இரு வகையினருக்கும் தாம் விரும்பியதை உண்ணும் உரிமை நிச்சயம் உண்டு. எனினும், திருவள்ளுவா், வள்ளலாரின் அறிவுரைப்படி அசைவ உணவைத் தவிா்ப்பது அனைவருக்குமே நல்லது.