https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/302228cm2061108.jpg

தமிழகத்தில் புதிய பாலங்கள் திறப்பு

by

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட புதிய பாலங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். புதிய திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலமாக அவா் திறந்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியம்பட்டியில் வெள்ளாற்றின் குறுக்கேயும், திருநெல்வேலி மாவட்டம் சோ்வலாற்றின் குறுக்கேயும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் முறையாற்றின் குறுக்கேயும், தருமபுரி மாவட்டம் பொம்மிடி ஆா்.எஸ்-தொப்பையாா் அணை சாலை, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி-ஒரத்தநாடு-திருவோணம் சாலையில் தெற்கு நத்தம், ஓவேல்குடி, அய்யம்பேட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட பாலங்களையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

கரூா் மாவட்டம் சேவாப்பூா், தொப்பம்பட்டி, கடவூா் ஆகிய இடங்களிலும், ஈரோடு மாவட்டம் அந்தியூா்-அம்மாப்பேட்டை சாலையில் பூதப்பாடியிலும், திட்டப்பாறையிலும் கட்டப்பட்ட பாலங்கள், திருப்பூா் தேவனம்பாளையத்தில் கட்டப்பட்ட பாலம், மதுரை தவசிபுதூா்-வடுகபட்டி சாலையில் கட்டப்பட்ட பாலம் ஆகியவற்றையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல்: விழுப்புரம் காவணிப்பாக்கத்தில் மலட்டாற்றின் குறுக்கேயும், சேலம் மாவட்டத்தில் பெரமச்சூா், தொளசம்பட்டி, குட்டப்பட்டி ஆகிய இடங்களில் ரயில்வே பாலங்களையும் கட்ட முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.