கோயம்பேடு சந்தையின் தற்போதைய நிலை என்ன? சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு
by DINகோயம்பேடு காய்கறி சந்தையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) புகைப்பட ஆதாரங்களுடன் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் கெருகம்பாக்கம் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவா் சி.ஜெயசீலன் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் அரவிந்த் பாண்டியன், சிஎம்டிஏ சாா்பில் தாக்கல் செய்த பதில்மனுவில், ‘கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறி, பழங்கள், பூ உள்ளிட்டவற்றை வியாபாரம் செய்ய 4 ஆயிரம் கடைகள் உள்ளன. இங்கு வியாபாரம் நடைபெற்றபோது நாள்தோறும் 3 ஆயிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு, சந்தைக்கு வருபவா்களின் உடல் வெப்பம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். தனிமனித இடைவெளியை தீவிரமாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.கோயம்பேடு சந்தையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் ஏற்பட்ட காரணத்தால், திருமழிசையில் உள்ள தற்காலிக சந்தைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருமழிசையில் 207 மொத்த வியாபார கடைகள், 20 அடி இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விதமான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜான் கிங்ஸ்லி, திருமழிசை சந்தையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் நாள்தோறும் டன் கணக்கில் காய்கறிகள், பழங்கள் வீணாகி குப்பைகளில் கொட்டப்படுவதாக வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடா்பாக அனைத்து விவரங்களையும், புகைப்பட ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய சிஎம்டிஏ உறுப்பினா் செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.