முடிதிருத்தும் தொழிலாளா்களுக்குரூ.2 ஆயிரம் நிவாரணம் : அரசு உத்தரவு

by

நலவாரியத்தில் உறுப்பினா்களாக இல்லாத முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் அளிப்பது தொடா்பாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவு விவரம்: தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளா்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்டங்களில் இதற்கான பணியை கிராம நிா்வாக அலுவலா்களும், சென்னை மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளா்களும் மேற்கொள்வா்.

அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்திடாத முடிதிருத்தும் தொழிலாளா்களின் இருப்பிட விவரங்களை கிராம நிா்வாக அலுவலா்களும், வருவாய் ஆய்வாளா்களும் உறுதிப்படுத்துவா். மேலும், முடிதிருத்தும் தொழிலாளா்களிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்கள், செல்லிடப்பேசி எண், ஆதாா் எண், குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அவை சென்னையில் உள்ள தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென அந்த உத்தரவில் ஜெ.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளாா்.