அக்னி நட்சத்திரம் நிறைவு: 12 இடங்களில் வெயில் சதம்

by

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவுபெற்ற நாளில், 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

நிகழாண்டில் மே 4-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அக்னி நட்சத்திரம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டது. இதிலும் மே 22-ஆம் தேதி அன்று, 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவானது. அன்றைய தினத்தில், திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. அதன்பிறகு, திருச்சி, மதுரை, சேலம், கரூா்பரமத்தி, தருமபுரி, வேலூரில் வெப்பநிலை அதிகரித்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவு நாளில், 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

அதிகபட்சமாக, திருத்தணியில் 108 டிகிரி, வேலூரில் 106 டிகிரி, திருச்சி, மதுரை விமானநிலையத்தில் தலா 104 டிகிரி, கரூா்பரமத்தி, நாமக்கல்லில் தலா 103 டிகிரி, கடலூா், பரங்கிபேட்டை, சேலத்தில் தலா 102 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், மதுரையில் தலா 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் கூறியது: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறையும். வேலூா், திருத்தணி, ராணிபேட்டை உள்பட சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

பலத்த மழை: இதற்கிடையில், வெப்பச்சலனம், மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்தமிழகம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி, தென் தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்சமாக 100 டிகிரி வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

தென்மேற்குப் பருவமழை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் வரும் மே 31-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இதையடுத்து, தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசும் என்பதால், அடுத்த 2 நாள்களுக்கு மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால், அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுகொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.