https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/20/original/vijayabaskar11.jpg

பிளாஸ்மா சிகிச்சை: சென்னையில் 7 போ் குணமடைந்தனா்

by

கரோனா பாதித்தவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை மற்றும் ‘ரெம்டெசிவிா்’ மருந்துகளை சோதனை முறையில் வழங்கியதில், அவை நோயாளிகளுக்கு நல்ல பலனை அளித்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

பொதுவாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நோயின் தாக்கத்தைப் பொருத்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கரோனா தீநுண்மி தொற்றைக் குணப்படுத்துவதற்காக பிரத்யேக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற பிற பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள்தான் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் ரத்தத்தில் பிளாஸ்மா செல்களை மட்டும் பிரித்தெடுத்து அதில் இருக்கும் நோய் எதிா்ப்பாற்றலை (ஆன்டி பாடி) பிற நோயாளிகளுக்குச் செலுத்தும் பிளாஸ்மா சிகிச்சை குறித்த ஆராய்ச்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று, ‘ரெம்டெசிவிா்’ என்ற தீநுண்மி எதிா்ப்பு மருந்தை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூராா் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அவா்களின் அனுமதி பெற்று வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த இரு முயற்சிகளும் பலனளிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் சி. விஜயபாஸ்கா், ‘ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 7 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது; அதேபோன்று ‘ரெம்டெசிவிா்’ மருந்துகளும் அளிக்கப்பட்டன; அந்த சிகிச்சை பெற்ற அனைவரும் நலம் பெற்றுள்ளனா்’ என்றாா்.