தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்!
by Rakesh, Vethuவடக்கு, கிழக்குப் பகுதிகளை தனி நாடாக்க வேண்டும் என்ற சிந்தனையின் மூலம் இந்த நாட்டில் தமிழ் அரசியல் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்துகின்றது. இது நடைமுறை சாத்தியக் கோரிக்கையல்ல. இலங்கையைப் பிரித்து தனிநாடு என்பது சாத்தியமானது அல்ல. தமிழ் அரசியல்வாதிகள் களயதார்த்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல தம்மைச் சரி செய்து கொள்ளவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக 50 ஆண்டுகளை நிறைவு செய்த மஹிந்தவிடம் இந்தியாவின் நியூஸ்18 தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றைப் பதிவு செய்து ஒளிபரப்பியுள்ளது. அந்த நேர்காணலில் 'தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக நினைக்கிறீர்களா?' என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னதாக இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினையும் தமிழ் அரசியல்வாதிகளின் பிரச்சினையும் வேறு வேறு என்பதைத் தெரிவிக்க வேண்டியது முக்கியமானது. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதும் அவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதும் முன்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாய்ப்புகளை பல திட்டங்கள் மற்றும் வளர்ச்சியின் மூலம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது. எப்படியிருந்தாலும் அரசியல்வாதிகளுடன் இணைந்த அந்தச் சாலை மிகவும் நீண்டதாக கடினமாக இருந்தது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளை தனி நாடாக்க வேண்டும் என்ற சிந்தனையின் மூலம் இந்த நாட்டில் தமிழ் அரசியல் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்துகின்றது. இது நடைமுறை சாத்தியக் கோரிக்கையல்ல. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைத் தாண்டி ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றார்கள். தெற்கில் தமிழர்கள் சிறுபான்மையினர்.
கொழும்பு நகரில் தமிழ் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர். இலங்கையில் மக்கள் கலந்து அழகாக வாழ்கின்றனர். தனிநாடு என்பது சாத்தியமானது அல்ல. தமிழ் அரசியல்வாதிகள் களயதார்த்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல சரி செய்துகொள்ள வேண்டும்" - என்றார்.