http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__617351710796357.jpg

திருப்பதி தேவஸ்தானத்தின் 6000 ஏக்கர் சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட முடிவு

* வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
* 700 ஆண்டு கால வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்


திருப்பதி: திருப்பதியின் 700 ஆண்டுக்கால வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில், தேவஸ்தான சொத்து விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றன. இதில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த சொத்துக்களில் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருக்கும் 49 சொத்துக்கள் உட்பட 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது.  இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால்ஆந்திர அரசின் தலையீட்டின் பேரில் தேவஸ்தான சொத்து விற்பனையை தள்ளிவைத்துள்ளது.
 இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வழக்கமான ஆலோசனை கூட்டத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் தமிழக தலைவருமான தொழில் அதிபர் சேகர், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டிக்கு கடிதம் ஒன்றை அளித்தார்.

அதில். ‘‘திருப்பதி தேவஸ்தான சொத்துக்கள் பற்றிய முழு விவரத்தையும் விவரங்களை அனைத்தையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், நேற்று வீடியோ கான்பரன்சில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அறங்காவலர் குழு  உறுப்பினர் சேகர் கலந்து கொண்டு, இந்த கோரிக்கைக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படிஒரு மாதத்தில் அனைத்து சொத்து விவரங்களும் தேவஸ்தான இணையதளத்தில் வெளியாகும். இதுகுறித்து, அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் கூறியதாவது:   திருப்பதி தேவஸ்தான வரலாறு 1326ல் இருந்து தொடங்குகிறது. மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அவரது ஆட்சியில் கோயிலுக்கு ஏராளமான நகை, நிலங்கள் எல்லாம் வழங்கியுள்ளார்.

அதற்கு பிறகு ஆற்காடு நவாப் 35 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அதன் பின்பு திப்பு சுல்தான் ஆட்சி செய்தார். அவரை தொடர்ந்து 1700ல் பிரிட்டிஷ் ஆட்சி வருகிறது. 1760க்கு பிறகு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கோயில் நிர்வாகம் சென்று விடுகிறது. அவர்கள் இந்த கோயிலை நிர்வாகம் செய்ய 14 மெகந்த் என்பவர்களிடம் ஒப்படைகிறார்கள். 1843லிருந்து 1936 வரைக்கும் கோயிலை நிர்வகிக்கிறார்கள். இவர்களுக்கு சொந்தமான மடத்தின் மூலம் மக்களால் வழங்கப்பட்ட   கிட்டத்தட்ட 3,000 ஏக்கர் நிலத்தை அந்த மடத்தின் தலைவரான அதீராம்ஜி என்பவர் பெயரில் 1942ல் எழுதி கொள்கின்றனர்.  அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் உள்ளவர்கள். மக்கள் கொடுக்கும் நன்கொடைகளை அதீராம்ஜி பெயரிலே எழுதி வந்தனர். அதன்படி, 5000ல் இருந்து 6000 ஏக்கர் நிலம் அவரது பெயரில் பதிவாகிறது. அதிலிருந்து 3000 ஏக்கர் நிலத்தை 1942ல் தேவஸ்தானத்துக்கு தந்தனர். மீதி நிலம் அதீராம்ஜி பெயரிலேேய இன்னும் பல மாநிலங்களில் உள்ளது.

 இதற்கிடையே, 1933ல் பிரிட்டிஷார் இந்த கோயிலுக்கு கமிஷனரை நியமிக்கின்றனர். அதன் பின்பு இதுவரை மக்கள் கொடுத்தது எல்லாம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 700 ஆண்டுகளாக மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 6000 ஏக்கர் நிலத்தின் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.  அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு மாதத்தில் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இதன் முழு விவரங்களும் வெளியிடப்படும். மக்கள் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்றார்.