மாவட்ட கலெக்டர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை: தமிழகத்தில் ஜூன் 1ம் தேதியில் இருந்து பேருந்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி?
* நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது
* டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
சென்னை: அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று காலை 10 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், ஜூன் 1ம் தேதி முதல் பேருந்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கில் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை மறுதினத்துடன் (31ம் தேதி) 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது.மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர்அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் பேசுவார்கள். இறுதியில், சில முடிவுகள் எடுக்கப்படும். ஆனாலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் நாளை அல்லது நாளை மறுதினமே அறிவிப்பார். இன்று நடைபெறும் கூட்டத்தில், முக்கியமாக தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு பேருந்தில் குறைந்தபட்சம் 20 முதல் 30 பயணிகள் மட்டுமே பயணம் செய்வது, முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்படும். மாநகர் மற்றும் வெளியூர்களுக்கும் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படலாம்.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் ஒரு சில நாட்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளது. இப்படி, டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. அதனால் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் குறைந்த அளவில் செல்ல அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்கள் போன்று சென்னையில் ஆட்டோ, கால்டாக்சி ஓட அனுமதிக்கப்படலாம். இப்படி சில முக்கிய அறிவிப்புகளுடன், ஜூன் 1ம்தேதி முதல் புதிய ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போதுள்ள ஊரடங்கில் தளர்வுகள் இருக்குமா, இதேநிலை நீடிக்குமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்து நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர் கள் சம்பத், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.