http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__575161159038544.jpg

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணிபுரிந்த தலைமை செவிலியர் மரணம்

ஓய்வுபெற்ற பிறகும் பணி நீட்டிப்பில்  சேவை செய்தவர் பலியான சோகம்

சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வாட்டில் பணியாற்றிய தலைமை செவிலியர் நேற்று மரணமடைந்தார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தவர் ஜான் மேலி பிரிசில்லா (58). தலைமை செவிலியர் என்பதால், இவர் மற்ற செவிலியர்களுக்கு கொரோனா வார்டில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி செய்து வந்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற இவர், பணி நீட்டிப்பு பெற்று கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் செவிலியர் மேரி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இவரது உடல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.