போர்க்குற்றங்கள் தொடர்பில் எவ்வித ஆதாரங்களும் இல்லை: அரசாங்கம்

by

இலங்கையின் படையினர் மீது சுமத்தப்பட்டு வரும் போர்க்குற்றங்கள் தொடர்பில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு செய்தித்தாள் ஒன்றில் வெளியான தகவல் ஒன்று தொடர்பில் பதில் அளிக்கும் இலங்கையின் ஜனாதிபதி செயலகம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் படையினர் மீது போர்க்குற்றம் சுமத்தக்கூடிய எவ்வித உத்தியோகபூர்வ ஆதாரங்களும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் செய்தித்தாளில் வெளியான படையினர் தொடர்பான தகவல்கள் உண்மை நிலவரத்தை காட்டவில்லை என்று ஜனாதிபதியின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் போர்வீரர்களை குறிவைப்பதை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்றும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயர்பதவிகளில் உள்ள படையதிகாரிகள் மீதே போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு போரின்போதும் அது முடிந்தவுடனும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை பொறுத்தவரை அது மழையின்போது தனி ஒருவரை சேறும் சகதியுமான குட்டைகளில் இருந்து தடுப்பதற்கு ஒப்பானது என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

மிருசுவிலில் 8 பொதுமக்களை கொலை செய்த சுனில் ரட்நாயக்க என்ற இராணுவவீரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஷவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களும் வெளிநாட்டு செய்திதாளில் சுமத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில் போரின்போது சரணடைந்த பல கடுமையான குற்றங்களை புரிந்தவர்கள் உட்பட்ட 12 ஆயிரத்து 500 விடுதலைப்புலிகளுக்கு உடனடியாகவே பொதுமன்னிப்பு வழங்கியமையை இலங்கை ஜனாதிபதியின் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.