ராஜபக்சக்களுடன் ஐ.தே.க. கூட்டு: சஜித் அணி சாடல்

by

ஐக்கிய தேசியக் கட்சி, ராஜபக்சக்களுடன் டீல் அரசியலில் ஈடுபடும் நபர்களின் கையில் சிக்குண்டுள்ளது. இதனால் அதனைப் பாதுகாப்பதற்காக ஐ.தே.க.வின் மாகாணசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய தேசியக் கட்சி கடத்தல்கார குழுவினரில் கையில் சிக்குண்டுள்ளது. ஐ.தே.கவின் கொள்கைகளை உண்மையாகப் பின்பற்றுபவர்கள் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ராஜபக்சக்களுடன் டீல் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இந்தக் குழுவினர் எப்போதுமே ஐ.தே.கவின் திறமைமிக்க அரசியல் தலைவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதையே செய்து வந்தனர்.

அவர்களது செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட ஐ.தே.க. உறுப்பினர்கள் பலர் வேறு வழியின்றி ராஜபக்சக்களுடனே இணைந்துகொண்டுள்ளனர். இவர்கள் தற்போது தாங்களே சிறிகொத்தவுக்கும் ஐ.தே.கவுக்கும் உரிமையாளர்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.

ஐ.தே.கவைச் சேர்ந்த பெருந்தொகையான உறுப்பினர்கள் இன்று ஐக்கி மக்கள் சக்தியுடனே இணைந்துள்ளனர். சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்குவதற்கு ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவே அனுமதி வழங்கியிருந்தது.

தற்போது எங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், மத்திய செயற்குழுவின் அங்கத்துவத்திலிருந்தும் நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்டு எமக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். எமக்கு தற்போது இந்தக் கடிதங்களால் எந்தப் பயணும் கிடைக்கபோவதில்லை.அவை தொடர்பில் நாங்கள் அக்கறை செலுத்துவதும்

கிடையாது. ஒழுக்காற்று நடவடிக்கை என்னும் பெயரில் திறமைமிக்க உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து செல்வதற்கு அனுமதித்த இவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது எங்கிருந்தார்கள் என்பதை நாட்டிலிலுள்ள அனைவரும் அறிவார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ராஜபக்சக்களுடன் டீல் செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டார்கள்.

இவ்வாறான மோசடிக்கார குழுவிடமிருந்து ஐ.தே.கவைக் காப்பாற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்தக் குழுவின் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்தும் கட்சி தாவாது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவன் என்ற வகையில் அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் நன்கறிந்தவன் நானே. அதனால் இந்த நபர்களிடமிருந்து ஐ.தே.கவைக் காப்பாற்ற வேண்டியது எமது கடமையாகும் என்றார்.