https://img.maalaimalar.com/Articles/2020/May/202005291625378372_Tamil_News_Chief-Minister-Edappadi-palaniswami-to-discuss-with-medical_SECVPF.gif

மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை

ஊரடங்கு நிறைவடைய இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு இன்னும் 2 நாளில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின்போது,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, நெறிமுறைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகளைக் கொண்ட சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் மட்டும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்படும்பட்சத்தில், சென்னையில் ஊரடங்கை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது, ஊரடங்கு காலத்தில் நோய்த்தொற்றை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை முதலமைச்சர் கேட்க உள்ளார்.

பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின் ஊரடங்கு குறித்து தகவல் தெரியவரும்.

Related Tags :

Edappadi Palaniswami | Coronavirus Lockdown | எடப்பாடி பழனிசாமி | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ்