https://img.maalaimalar.com/Articles/2020/May/202005291556232168_Tamil_News_Lockdown-should-extend-by-15-days-Goa-CM_SECVPF.gif

மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்- கோவா முதல்வர்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோவா முதல்வர் கூறியுள்ளார்.

பனாஜி:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு மே 31ம் தேதியுடன் (நாளை மறுநாள்) முடிவடைகிறது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கை முழுமையாக நீக்கக்கூடாது என்றும், கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை வேண்டுமானால் வழங்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறி உள்ளார்.  உள்துறை மந்திரியை தொடர்பு கொண்டு பேசியபோது இந்த யோசனையை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

‘ஊரடங்கை நீட்டிக்கும் அதேசமயம், மேலும் சில தளர்வுகளையும் அறிவிக்க வேண்டும். 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதித்து தனிமனித இடைவெளியை பின்பற்றி ஓட்டல்களை திறக்க அனுமதிக்கவேண்டும். இதேபோல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க வேண்டும் என பலர் விரும்புகின்றனர்’ என்றும் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

கோவா மாநிலத்தில் இதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.

மே 31ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் இன்று ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Coronavirus Lockdown | Goa CM | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ் | கோவா முதல்வர்