விமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ எச்சரிக்கை
வெட்டுக்கிளிகளால் விமானத்தை தரையிறக்கும்போதும், கிளப்பும்போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என விமானிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தற்போது இந்தியா நோக்கி படையெடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிகமான அளவில் பரவி உள்ளது.
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பயிர்களை நாசமாக்கிவிட வாய்ப்புள்ளதால் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெட்டுக்கிளிகளால் விமானத்தை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்காக வெட்டுக்கிளிகள் படையெடுப்பதால் விமானம் தரையிறங்கும்போது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இருக்கும். இதனல் விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
DGCA அனுப்பியுள்ள கடிதத்தில் ‘‘மிகவும் சிறிய அளவில் இருக்கும் தனிப்பட்ட வெட்டுக்கிளி கூட விமானத்தின் கண்ணாடியில் மோதி விமானியின் பார்வையில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். இதனால் விமானத்தை இறக்குவது, டாக்சி மற்றும் விமானத்தை டேக்ஆஃப் செய்யும்போது மிகப்பெரிய கவலை அளிப்பதாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய கூட்டமாக தரையில் நீண்ட தூரத்திற்கு பரவிக்கிடக்க வாய்ப்புள்ளது. அப்போது அதுகுறித்து அறிந்திருக்க விமானிகள் விஷுவல் பிளைட் ரூல்ஸ் தேவைப்படும். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், தங்கள் ஏரோட்ரோம் அருகே வெட்டுக்கிளி இருப்பதை அறிந்தால், தரையிறங்கும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முடிந்த அளவிற்கு வெட்டுக்கிளிகள் அதிகமாக காணப்பட்டால், அவற்றை தவிர்த்து விட வேண்டும். இரவு வெட்டுக்கிளிகள் படையெடுக்காது என்பதால் விமானிகள் அச்சம் இல்லாமல் விமானத்தை இயக்கும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக தரையில் பரந்து கிடப்பதால் விமானங்கள் தரையிறங்கும் போதும், புறப்படும் போதும் அச்சுறுத்தலாக விளங்கும். என்ஜின் இன்லெட், ஏர் கண்டிஷனிங் பேக் போன்ற பகுதிகள் மூலம் விமானத்திற்குள்ளும் வெட்டுக்கிளிகள் வர வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.