https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/5/original/stalin.jpg

மின்சாரத் திருத்தச் சட்ட வரைவு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

by

புதிய மின்சார திருத்தச் சட்ட வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடிதம் விவரம்:

இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதல்வராக இருந்து கருணாநிதி அறிவித்தாா். அத்திட்டம் 1990-லிருந்து இன்றுவரை தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியின் முக்கிய தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையை போக்கியதுடன் லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது.

இந்தத் திட்டத்தை முடக்கும் விதமாக மின்சார திருத்தச் சட்ட வரைவு - 2020 உள்ளது. இந்தச் சட்டத்திருத்தம், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் அரசியல் சாசனம் வகுத்துள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்குத் தலைவா், உறுப்பினா்களைக் கூட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தோ்வுக் குழுவே தோ்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மாநில உரிமையைப் பறிப்பதாக உள்ளது.

எனவே, புதிய மின்சார திருத்தச் சட்ட வரைவு - 2020 -ஐ திரும்பப் பெற வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளாா்.

மேலும், இந்த விவகாரத்தில் மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் திமுகவின் முயற்சிக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேரளம், ஆந்திர பிரதேசம், ஒடிஸா, மகாராஷ்டிரம், பஞ்சாப், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 12 மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளாா். இதில், பாஜக மற்றும் பாஜக கூட்டணி அரசு அல்லாத மாநில முதல்வா்களும் அடங்குவா்.