சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை - டொனால்டு டிரம்ப்
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு "பெரிய மோதல்" நடந்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவுடனான "பெரிய மோதல்" குறித்து பேசினேன். இந்தியப் பிரதமர் "நல்ல மனநிலையில்" இல்லை. நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு சிறந்த மனிதர்.இந்தியாவும் சீனாவும் ஒவ்வொன்றும் 140 கோடி மக்களைக் கொண்ட இரண்டு நாடுகள். மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகள்.இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, அநேகமாக சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார்.ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று டிரம்ப் பலமுறை கூறிய போதிலும், இந்தியா திட்டவட்டமாக அதை ஏற்க மறுத்து வருகிறது.இருந்தும் தொடர்ந்து வலியுறுத்திய படியே இருக்கிறார்.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை அறிவித்து இருந்தார்இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சினை எழுந்து இருப்பதால் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாடுகளுக்கு தெரிவித்து இருக்கிறோம்“ என்று கூறி இருந்தார்.