https://d13m78zjix4z2t.cloudfront.net/Post-Card_74.png

தென்மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை!

by

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்தது.  இடிமின்னலுடன் கூடிய கனமழையினால், கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த சில வாரங்களாக அக்னி நட்சத்திர வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில், மதுரை, மாநகர் பகுதிகளான அண்ணாநகர், கே.கே.நகர், மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் திறந்த வெளி காய்கறி கடைகளில் மழைநீர் தேங்கியதால், காய்கறிகள் பெருமளவு சேதமடைந்தன. மேலும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் கம்பங்களும் கீழேவிழுந்து சேதமடைந்தன, மழை காரணமாக திடலில் வைக்கப்பட்ட 15 இலட்ச ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் சேதமடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கன மழை காரணமாக மதுரையில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது, தெற்கு மாசி வீதி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் மழை நீர் தேங்கியதால், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பள்ளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இளைஞரை மீட்ட காட்சி, சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவியூர், அரசகுளம், மல்லாங்கிணறு, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பலத்த மழை காரணமாக சாலைகளிலும், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பும் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி காட்சியளித்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி திருவரங்குளம் கரம்பக்குடி காவேரிமில் உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்ததுடன் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.