https://d13m78zjix4z2t.cloudfront.net/maharashtra.jpg

மகாராஷ்டிராவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலி!

by

மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகளவிலான எண்ணிக்கையில் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. 

நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 116 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தினசரி பலி எண்ணிக்கை அளவில் புதிய உச்சமாக அமைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,682 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,228ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 8,381 பேர் குணமடைந்தனர்:

இதனிடையே இன்று மேலும் ஒரு மைல்கல்லை மகாராஷ்டிர மாநிலம் எட்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,381 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் அங்கு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,616ல் இருந்து 26,997ஆக அதிகரித்துள்ளது.

தாராவி:

ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இன்று மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை அங்கு தொற்றால் 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தம் 1,715 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

ஜூன் 1 முதல் தளர்வு:

மகாராஷ்டிராவில் ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

2,211 போலீசுக்கு கொரோனா:

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 போலீசார் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 2,211 போலீசார் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.