1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை : அமேசான் அதிரடி அறிவிப்பு!
by saravanamanojதற்காலிக ஊழியர்கள் 1,25,000 பேருக்கு நிரந்தர வேலை வழங்கவிருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் பலரும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவிருப்பதாகவும் பல நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. வளர்ந்த நாடான அமெரிக்காவில் 4 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையை இழந்து தவித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் 1,25,000 பேருக்கு நிரந்தர வேலை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆன்லைன் சேவைகளை நாட ஆரம்பித்தனர். அதனால் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக லட்சக்கணக்கான தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தியது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் அனைத்து விதமான பொருட்களும் ஆன்லைனில் விற்கப்படுகின்றன. அதனால் ஆன்லைன் விற்பனை சேவை அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து இந்தியாவில் 50,000 பேருக்கு தற்காலிகமாக வேலை கொடுப்பதாக அமேசான் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது ஆன்லைன் சேவை அதிகரித்து வருவதாலும், பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருவதாலும் 1,25,000 தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் வேலையை இழந்து வரும் இந்த சூழலில், அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.