திருடு போகும் தண்ணீர்… பூட்டு போட்டு பாதுகாக்கும் கிராம மக்கள்!
by saravanamanojமத்தியப்பிரதேசம் ஜான்சர் கிராமத்தை சேர்ந்த மக்கள் தண்ணீர் திருடு போகாமல் தடுப்பதற்காக தொட்டிகளை பூட்டு போட்டு பாதுகாக்கின்றனர்.
அதிகரிக்கும் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றங்களால் மழை அளவு குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. சில பகுதிகளில் உள்ள மக்கள் கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல் தண்ணீர் பஞ்சத்தையும் அனுபவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீருக்காக பல கிலோமீட்டர் நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் ஜான்சர் கிராமத்தை சேர்ந்த மக்கள் தண்ணீரை சேமித்து வைத்துள்ள தொட்டிகளை பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் திருடு போவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தண்ணீருக்காக மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாகவும், கஷ்டப்பட்டு எடுத்து வரும் தண்ணீர் திருடுபோவதால் பூட்டு போட்டு பாதுகாத்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜாபுவா மாவட்ட பொது சுகாதார பொறியியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜான்சர் கிராமத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்க அடி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெயில் காலத்தில் நிலத்தடி நீர் அளவு குறைந்து விடுவதால் மக்கள் இந்த பிரச்னையை எதிர்கொள்கின்றனர். அடி குழாய்கள் வேலை செய்யவில்லை என்றால், அதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியுள்ளார்.
தண்ணீர் திருடு போகும் என அஞ்சி, பூட்டு போட்டு பாதுகாக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.