
உணவுக்கு வழியின்றி தற்கொலை: புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை!
by saravanamanojஉத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் உணவுக்கே வழி இல்லாததால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை, உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால் வேறு வழியின்றி சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் சொந்த மாநிலம் திரும்பியும் வேலை எதுவும் இல்லாததால் உணவுக்கு திண்டாடி வருகின்றனர். பொருளாதார சிக்கலால் தொழிலாளர்கள் பலரும் மனவேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பொருளாதார சிக்கல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். லோரா கிராமத்தை சேர்ந்த 22 வயதான சுரேஷ் என்பவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஊர் திரும்பியுள்ளார். வேலை இல்லாமல் கடும் பொருளாதார நெருக்கடியால் அவதிக்கப்பட்டு வந்த அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் அருகில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதே போல் சிந்தன் காலா பகுதியில் வசிக்கும் 20 வயதான மனோஜ் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன் மும்பையில் இருந்து ஊர் திரும்பியுள்ளார். பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர், சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்க பணம் இல்லாததால் பட்டினியை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்து, தற்கொலை, பசி என அவர்களது தற்கொலை அதிகரித்து வருகிறது. உணவுக்கு வழி இல்லாமல் உயிரிழக்கும் பரிதாபம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.