15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு!
by dhamotharanகொரோனா வைரஸ் தாக்கத்தால் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் கடும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. அதனால் பொருளாதார சரிவை சமாளிப்பதற்காக பிரபல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இந்நிலையில் கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் சுமார் 15,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
செலைவைக் குறைக்க திட்டம்:
கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவையடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் செலவு குறைப்புத் திட்டம் முக்கியமானதாக இருப்பதாக இடைக்கால தலைமை செயல் அதிகாரி குளோடில்ட் டெல்போஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 2.2 பில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.16 கோடி) செலவை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் பிரான்சில் உள்ள நான்கு உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படலாம் அல்லது மறுசீரமைக்கப்படலாம் எனவும் கூறியுள்ளது.
வாகன உற்பத்தி குறையும்:
மொரோக்கா மற்றும் ருமேனியாவில், தொழில் நிறுவன விரிவாக்க திட்டங்கள் நிறுத்தப்படுவதன் மூலம் பிரான்சுக்கு வெளியே கூடுதலாக 10,000 பேர் வேலை இழக்கவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தற்போது ரெனால்ட் நிறுவனம் 4 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து வருவதாகவும், இந்த உற்பத்தி அடுத்த நான்கு ஆண்டுகளில் 3.3 மில்லியன் வாகனங்களாக குறைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச அளவில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.