ஊரடங்கு குறித்து அடுத்த கட்ட அறிவிப்பு என்ன?
by dhamotharanதேசிய அளவில் அமல்படுத்தப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கு நாளை மறுதினத்துடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு அன்றுடன் நிறைவடையுமா அல்லது தொடருமா என்று கேள்விகளுக்கு விடைசொல்ல மத்திய மாநில அரசுகளின் விவாதங்கள் தீவிரமாகியுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அங்கமாக கடந்த மார்ச் 25ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. கடந்த 18ந்தேதி முதல் அமலில் இருந்து வரும் 4ம் கட்ட ஊரடங்கு நாளை மறுதினத்துடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு மே 31ந்தேதியுடன் நிறைவடையுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்கிற கேள்வியே தற்போது நாடெங்கிலும் வியாபாத்திருக்கிறது. இந்த கேள்விக்கு விடைசொல்ல மத்திய, மாநில அரசுகள் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த ஆலோசனைகளின் முக்கிய நிகழ்வாக டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஏற்கனவே மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர், மாநில முதல்வர்களின் கருத்துக்களுடன் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசியுள்ளார். ஊரடங்கை நாளை மறுதினத்துடன் நிறைவு செய்வதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்தும், அப்படி நீடிக்கும்பட்சத்தில் கூடுதல் தளர்வுகளை எந்தெந்த விதங்களில் வழங்கலாம் என்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டர். சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவின் கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் கேட்டறியுள்ளார்.
இதற்கிடையே நாடெங்கிலும் ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் கோவா முதல்வர் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தததாகக் கருதப்படுகிறது. தேசிய அளவில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக நாளையோ அல்லது நாளை மறுதினம் பிரதமரின் மனதில் குரல் வானொலி உரையாடல் நிகழ்ச்சியிலேயோ முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.