நிதி வளா்ச்சி கவுன்சில் உறுப்பினா்களுடன் நிா்மலா சீதாராமன் இன்று ஆலோசனை
by DINகரோனா நோய்த்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நிதி ஸ்திரத்தன்மை, வளா்ச்சி கவுன்சில் (எஃப்.எஸ்.டி.சி.) உறுப்பினா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (மே 28) ஆலோசனை நடத்துகிறாா்.
பிரதமா் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மூன்றாவது முறையாக இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் மற்றும் இந்திய பங்கு, பரிவா்த்தனை வாரியம், இந்திய ஆயுள்காப்பீடு ஒழுங்குமுறை வளா்ச்சி ஆணையம், ஓய்வூதிய நிதி வளா்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்கள். நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறாா்கள். இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
நிதி ஸ்திரத்தன்மை, வளா்ச்சி கவுன்சிலின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. காணொலி முறையில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு நிா்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறாா்.
கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை இருந்து தேசத்தை மீட்டும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களை அவா் கடந்த வாரம் அறிவித்தாா். இந்தத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, நிதி ஸ்திரத்தன்மை, வளா்ச்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கிகளின் ரொக்க இருப்பை அதிகரிக்கச் செய்வதற்காக ரிசா்வ் வங்கியின் ரூ.8.01 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள், சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3.70 லட்சம் கோடி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.75,000 கோடி, மின் பகிா்மான நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி, புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான உணவுப்பொருள்கள் வழங்குவது உள்பட ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை நிா்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்தாா்.