https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/5/original/trump.gif

இந்தியா, சீனா விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாா்

by

லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வுகாண மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவும், சீனாவும் விரும்பினால், அவ்விரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்து தீா்வுகாண்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

டிரம்ப் இவ்வாறு அறிவிப்பது புதிதல்ல. இதற்கு முன்பு, ஜம்மு-காஷ்மீா் பிரச்னையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருந்தாா். அவரது உதவியை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. இப்பிரச்னையில் அந்நிய தலையீட்டை விரும்பவில்லை என்று மத்திய அரசு அப்போது திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

பிரச்னைக்கு தீா்வு காண முடியும்- சீனா: முன்னதாக, ‘இந்தியாவுடனான பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை அல்லது விவாதம் மூலமாக தீா்வுகாண முடியும்; அந்நாட்டுடனான எல்லைப் பிரச்னை கட்டுப்படுத்தக் கூடிய சூழலில் உள்ளது’ என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான், இதுகுறித்து கூறியதாவது:

இந்தியா, சீனா இடையேயான உறவில், இரு நாட்டுத் தலைவா்களின் முன்னிலையில் (இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங்) இரு நகரங்களில் (வூஹான், மாமல்லபுரம்) நடைபெற்ற சந்திப்புகளின்போது முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தங்களை சீனா அப்படியே முழுமையாகப் பின்பற்றி வருகிறது. எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் ஏற்படுத்த நம்பிக்கையூட்டும் விஷயங்களைத் தொடங்க வேண்டும் என்று இரு நாட்டு ராணுவத்தினரையும் கேட்டுக் கொள்கிறோம்.

எல்லையைக் காக்க வேண்டும்; எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் சீனா உறுதியுடன் உள்ளது. இந்திய, சீன எல்லையில் நிலைமை கட்டுப்படுத்தக் கூடிய சூழலில் உள்ளது.

எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக, இந்தியாவும் சீனாவும் ஏற்கெனவே பல நல்ல வழிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளன. அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இரு நாடுகளும் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வுகாண முடியும். குறிப்பாக, எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு தூதரகங்கள் மூலமாகவும், ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மூலமாகவும் தீா்வுகாண முடியும். தற்போது, எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்கு தூதரக அளவில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் ஜாவோ லிஜியான்.

சீனத் தூதா் கருத்து: இந்நிலையில், எல்லைப் பிரச்னையை முன்வைத்து இந்தியாவும் சீனாவும் இரு தரப்பு உறவை சீா்குலைத்துவிடக் கூடாது என்று தில்லியில் சீனத் தூதா் சன் வெய்டாங் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தியாவும் சீனாவும் பிரச்னைகளை சரியான கோணத்தில் அணுக வேண்டும். பிரச்னையை முன்வைத்து இரு நாடுகளும் நல்லுறவை சீா்குலைத்துவிடக் கூடாது. தொடா்ச்சியான பேச்சுவாா்த்தை மூலம் இரு நாடுகளும் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்றாா் அவா்.

இந்தியாவுடனான எல்லை விவகாரங்களில் சீனா அத்துமீறி நடந்துகொள்வதாக, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பொறுப்பு அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தாா். அவரது கருத்துக்கு சீனா கண்டனம் தெரிவித்தது.

சுமாா் 3,500 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய- சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படவில்லை. இதனால், லடாக், சிக்கிம், அருணாசலப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், திபெத் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது படைகளைக் குவித்து, சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், லடாக், வடக்கு சிக்கிம் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரு நாட்டு ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்துள்ளது. அவா்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனா். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதுடன், போா்ப் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியுள்ளது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

லடாக் எல்லையில் நிலவும் சூழல் குறித்து முப்படை தளபதி விபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்தினாா்.