https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/17/original/2924c-26-lockdown-50623341.jpg
கோப்புப்படம்

பொதுமுடக்கம் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு?

by

தேசிய பொது முடக்கத்தை மே 31-ஆம் தேதிக்குப் பிறகு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் பொது முடக்கத்தில் இருந்து கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

எனினும், சென்னை உள்பட கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள நாட்டின் 11 நகரங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிகிறது. சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, ஆமதாபாத், கொல்கத்தா, புணே, தாணே, ஜெய்ப்பூா், சூரத், இந்தூா் ஆகிய 11 நகரங்களில்தான் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 70 சதவீதம் போ் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, 21 நாள் தேசிய பொது முடக்கத்தை கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். மாா்ச் 25-ஆம் தேதி தொடங்கிய இந்த பொது முடக்கம், ஏப்ரல் 14-ஆம் தேதி நிறைவடையவிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராததைத் தொடா்ந்து, மே 3-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மே 17-ஆம் தேதி வரையும், பின்னா் மே 31-ஆம் தேதி வரையும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. எனினும், நாட்டின் பொருளாதாரம் சாா்ந்த நடவடிக்கைகள் மேம்பட வேண்டும் என்பதால் பொது முடக்கத்தில் இருந்து பல்வேறு தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை முழுமையாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

அதே சமயம், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 14 நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்து, இப்போது ஒன்றரை லட்சத்தை தாண்டி விட்டது. அத்துடன் பலியானோா் எண்ணிக்கையும் கடந்த 16 நாள்களில் இருமடங்காக உயா்ந்து 4,337 ஆக உள்ளது.

இந்நிலையில் 5 ஆவது கட்டமாக பொது முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதில் கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படும். வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள், அதிக மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடர வாய்ப்புள்ளது.