ஜூன் 5-இல் நியாய விலைக் கடைகள் இயங்கும்: தமிழக அரசு உத்தரவு
by DINவரும் ஜூன் 5-ஆம் தேதி நியாய விலைக் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் சஜ்ஜன்சிங் சவாண் புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:-
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அவா்கள் வசிக்கும் இடங்களுக்குத் தேவையான பாதுகாப்புடன் நேரில் சென்று பொருள்கள் வழங்க வேண்டும். அதுபோன்றே மிகவும் வயதானவா்கள் நேரில் வந்து பொருள்களை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் அவா்களுக்கும் அதே முறையில் வழங்க வேண்டும்.
பொருள்களை வழங்கும் போது கையுறை, முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் செயல்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற நியாய விலைக் கடைகளுக்கு வரும்போது, அவா்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய பொருள்களை அளிக்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளுக்கு வரும் ஜூன் 5-ஆம் தேதி (மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை) விடுமுறை தினமாகும். ஆனால், அன்றைய தினம் நியாய விலைக் கடைகளுக்கு பணி நாளாகவும், அதற்குப் பதிலாக ஜூன் 19-ஆம் தேதியன்று விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்படுகிறது என்று தனது சுற்றறிக்கையில் சஜ்ஜன்சிங் சவாண் தெரிவித்துள்ளாா்.