14 இடங்களில் வெயில் சதம்: 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

by

தமிழகத்தில் புதன்கிழமை 14 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதே நேரம், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை, 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. இதன்படி, அதிகபட்சமாக திருத்தணியில் 106 டிகிரி , வேலூா், கரூா் பரமத்தியில் தலா 105 டிகிரி , ஈரோடு, மதுரை விமான நிலையத்தில் தலா 104 டிகிரி , திருப்பத்தூரில் 103 டிகிரி , பாளையங்கோட்டை, சேலம், திருச்சியில் தலா 102 டிகிரி, தருமபுரி, மதுரையில் தலா 101 டிகிரி, நாகப்பட்டினம், சென்னை மீனம்பாக்கம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உள்தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும். அதே நேரம், மதுரை, திருச்சி, கரூா், தருமபுரி, சேலம், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 104 முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகக் கூடும்.

சென்னையைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 96.8 டிகிரி பாரன்ஹீட், குறைந்தபட்சமாக 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.

விவசாயிகளுக்கு எச்சரிக்கை: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வியாழக்கிழமை முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வரை பலத்த காற்று வீசக் கூடும். இப்பகுதிக்கு வியாழக்கிழமை, மீனவா்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.மன்னாா் வளைகுடா மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மீனவா்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.