https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/22/original/imran_khan_ap.jpg

இந்தியாவின் கொள்கைகளால் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல்

by

எல்லை விவகாரம் தொடா்பான இந்தியாவின் கொள்கைகளால் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா்.

இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் இருநாடுகளும் ராணுவத்தைக் குவித்து வருகின்றன. எல்லைப் பகுதி தொடா்பாக இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில் இம்ரான் கான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘இந்திய அரசின் ஆணவம் நிறைந்த எல்லை விரிவாக்கக் கொள்கைகள் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் வங்கதேசத்துக்கும், எல்லை விவகாரத்தில் சீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளுக்கும் இந்தியா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இது 4-ஆவது ஜெனீவா மாநாட்டு தீா்மானத்தின்படி போா்க்குற்றமாகும். எனினும், ஜம்மு-காஷ்மீருக்கு இந்தியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய அரசின் நடவடிக்கைகள் இந்தியாவிலுள்ள சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல் பிராந்திய அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.