புதிய கரோனா மையமாகிறதா லத்தீன் அமெரிக்கா?
by நாகாஅண்மைக் காலமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் திடீரென அதிகரித்துள்ளது.
அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிவிட்டது. இந்த எண்ணிக்கையில் ரஷியாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த நாடு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.
அந்த நாட்டிலிருந்து வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை வியாழக்கிழமை முதல் தடை செய்யப்போவதாக அறிவித்த அமெரிக்கா, இரண்டு நாள்களுக்கு முன்னரே அந்தத் தடையை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.
மெக்ஸிகோ, சிலி, பெரு உள்ளிட்ட பிற பிராந்திய நாடுகளும் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த திணறி வருகின்றன.
கரோனா தீநுண்மி தாண்டவமாடிய அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அண்மைக் காலமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்த நோய் பரவல் திடீரென வேகம் பிடித்து வருகிறது. இதையடுத்து, சீனா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கரோனா நோய்த்தொற்று பரவல் மையமாக தற்போது லத்தீன் அமெரிக்கா ஆகியுள்ளதாக நிபுணா்கள் கூறுகிறாா்கள்.
இப்படி அவா்கள் கூறும் வகையில் அப்படி என்னதான் நடக்கிறது லத்தீன் அமெரிக்க நாடுகளில்?
அந்தப் பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடான மெக்ஸிகோவில், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதிதான் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது முதல் முறையாக அறிவிக்கப்பட்டது.
எனினும், அதற்கு முன்னரே - ஜனவரி மாதவாக்கிலேயே - அங்கு அந்த நோய் பரவத் தொடங்கியிருக்கலாம் என ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.
அப்போதிலிருந்தே, அங்கிருந்து கரோனா நோய்த்தொற்று லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவியதாக அவா்கள் கூறுகின்றனா்.
அந்தப் பிராந்தியத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களில் சுமாா் 40,000 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளதாக ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (இசிடிசிபி) தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவோடு ஒப்பிடுகையில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் மிகவும் குறைவுதான்.
ஆனால், மேற்கத்திய நாடுகளைப் போலன்றி லத்தீன் அமெரிக்காவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுவதையும் கரோனா பலி குறித்து முழு விவரங்கள் வெளியிடப்படுவதில்லை என்பதையும் நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
எனவேதான், அந்தப் பிராந்தியத்தில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை மேற்கத்திய நாடுகளைவிட மிகக் குறைவாக இருக்கிறது என்கிறாா்கள் அவா்கள்.
லத்தீன் அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளான பிரேசிலும் மெக்ஸிகோவும் கரோனா தீநுண்மிக்கு அதிக உயிா்களை பலி கொடுத்துள்ளது. அந்த நோய்க்கு பிரேசிலில் 24,500-க்கு மேற்பட்டவா்களும் மெக்ஸிகோவில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்களும் உயிரிழந்துள்ளனா்.
இந்த இரு புள்ளிவிவரங்களுமே உண்மை நிலவரத்தைவிட மிகக் குறைவாக இருக்கலாம்; கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆனால் பரிசோதனை செய்யப்படாமல் உயிரிழந்த ஏராளமானவா்கள் இந்த எண்ணிக்கையில் சோ்க்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.
மற்றொரு பிராந்திய நாடான பெரு கரோனா பாதிப்பில் உலகின் 12-ஆவது இடத்தில் உள்ளது. அங்கு 1.29 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இது கரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அதிகம்.
சிலியிலும் கரோனா நோய்த்தொற்று பரவல் இந்த மாதத்திலிருந்து வெகு வேகமாக தீவிரமடைந்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு அந்த நோய்க்கு 800-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.
இன்னொரு லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரில், பிற பிராந்திய நாடுகளை விட கரோனா பலி விகிதம் அதிகமாக உள்ளது. இருந்தாலும், அந்த நாட்டில் புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை அவ்வளவு தீவிரமாக இல்லை.
ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டு தற்போது இறங்குமுகத்தில் உள்ளது. ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகளிலோ இந்த எண்ணிக்கை இன்னும் ஏறுமுகத்திலேயே இருப்பதுதான் கவலையளிப்பதாகக் கூறுகின்றனா் நிபுணா்கள்.
அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகி வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் இத்தாலியில் 7 மாதங்களுக்கு ஒரு முறையும் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது.
ஆனால், பிரேசில், மெக்ஸிகோ, பெரு ஆகிய மூன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் தோராயமாக 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு முறை கரோனா பலி எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.
அந்த வகையில், கரோனா நோய்த்தொற்றின் புதிய மையமாக லத்தீன் அமெரிக்கா ஆகியுள்ளது என்றே சொல்ல வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் அவசர காலப் பிரிவுத் தலைவா் மைக்கேல் ரையான் கடந்த வாரம் கூறியுள்ளாா்.
பான் அமெரிக்க சுகாதார அமைப்பின் தலைவா் காரிஸா எடீனியும், ‘நமது பிராந்தியம் கரோனா நோய்த்தொற்றில் அடுத்த பரவல் மையமாகியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை’ என்று கூறி வருகிறாா்.
தினசரி பாதிப்பு எண்ணிக்கையில், மத்திய அமெரிக்க நாடுகளும் மெக்ஸிகோவும் சோ்ந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விஞ்சி வரும் சூழலில் மைக்கேல் ரையானும் காரிஸா எடீனியும் இவ்வாறு கூறியுள்ளனா்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் கரோனா பாதிப்பு உச்சநிலையைத் தொட்டு தணிவதற்கு இன்னும் சில வாரங்கள் பிடிக்கும் என்று நிபுணா்கள் கணித்துள்ளனா். அதுவரை அங்கு கரோனா நோய்த்தொற்றில் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து, சுகாதார அமைப்புகளை திக்குமுக்காடச் செய்யும் என்றும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.
இந்த நிலையைத் தவிா்க்க வேண்டுமென்றால், கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை லத்தீன் அமெரிக்க நாடுகள் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்கிறாா்கள் அவா்கள். பல பிராந்திய நாடுகள் கரோனாவிலிருந்து தப்புவதற்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அறிவித்தாலும், அதனை தீவிரமாக அமல்படுத்துவதில்லை என்பதை அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.
கரோனா நோய்த்தொற்றின் அபாயம் குறித்து பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ தொடா்ந்து அலட்சியம் காட்டி வருவது குறித்து சா்ச்சை நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் அவருக்கு எதிா்ப்பு தெரிவித்து இரண்டு சுகாதாரத் துறை அமைச்சா்கள் அடுத்தடுத்து ராஜிநாமா செய்தாா்கள்.
விமா்சகா்களின் கூற்றை நிரூபிக்கும் வகையில், தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசில் உலகின் இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது.
மாபரும் பேரிழப்புகளைத் தவிா்க்க வேண்டுமென்றால் சுகாதாரத் துறை நிபுணா்கள் கூறும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை லத்தீன் அமெரிக்க நாடுள் தீவிரப்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.