கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டிய நிலையில் உலகிலேயே இந்திய இறப்பு சதவீதம் மிக குறைவு: சுகாதார வல்லுனர்கள் தகவல்
புதுடெல்லி: கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டிய நிலையில் உலகிலேயே இறப்பு சதவீதம் மிக குறைவாக உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவித்தனர். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது, கட்டுப்படுத்துவது, மேலாண்மை ஆகிய பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும்கூட, ேநாய் பரவல் பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், தடம் அறிதல், தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் கொரோனா நோயறிதல் சோதனைத் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 1.1 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்படுகிறது.
சோதனைக்கூடங்களின் எண்ணிக்கை, ஷிப்டுகள், ஆர்டி-பிசிஆர் இயந்திரங்கள், பணியாளர்கள் எண்ணிக்கை போன்றவை அதிகரித்துள்ளதால் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வகங்கள் 430, தனியார் ஆய்வகங்கள் 182 என மொத்தம் 612 சோதனைக்கூடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி சோதனை செய்தல், அறிகுறியில்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துதல் ஆகியவை பின்பற்றப்படுகின்றன.
உள்நாட்டிலேயே ஆர்டி-பிசிஆர் உபகரணங்கள், விடிஎம், துடைப்பான்கள், ஆர்என்ஏ பிரித்தெடுக்கும் உபகரணங்கள் உற்பத்தி அதிகரித்து வருவதால் சோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ெகாரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடையும் நபர்களின் விகிதம் தற்போது 41.61 சதவீதமாக உள்ளது. கிட்டத்தட்ட 64 ஆயிரம் நோயாளிகள் இதுவரை கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. கடந்த ஏப். 15ம் தேதி 3.30 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் தற்போது 2.87 சதவீதமாக குறைந்துள்ளது.
உலகிலேயே இதுதான் மிகவும் குறைவான விகிதமாகும். உலக இறப்பு விகித சராசரி தற்போது 6.45 சதவீதமாக உள்ளது. அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கான இறப்பு விகித ஆய்வின்படி, இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு இது 0.3 சதவீதமாக உள்ளது. உலகப் புள்ளிவிபரம் லட்சம் மக்கள் தொகைக்கு இறப்பு விகிதம் 4.4 சதவீதம் எனக் கூறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை லட்சம் மக்கள் தொகைக்கான இறப்பு விகிதமும், பாதிக்கப்பட்டோர் இறப்பு விகிதமும் மிகக் குறைவாக இருப்பதால் சிகிச்சை மேலாண்மை திருப்தி அளிப்பதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,793 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 4,344 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 64,277 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.