https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547325.jpg

சர்வதேச அளவில் இந்தியா முன்னணி: விமானப்படை தலைமை தளபதி தகவல்

+2

கோவை : ''தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் முன்னோடியாக இருப்பதால் 10 - 20 ஆண்டுகளுக்குள் சர்வதேச அளவில் இந்திய விமானப்படை முன்னணியில் இருக்கும்'' என தலைமை தளபதி பதவுரியா கூறினார்.

கோவை சூலுார் விமானப்படை தளத்தில் 'மேம்படுத்தப்பட்ட தேஜஸ் எம்.கே-. 1 எப்.ஓ.சி. படைப்பிரிவு' நேற்று துவங்கப்பட்டது. முதல் கட்டமாக நேற்று ஒரு விமானம் சேர்க்கப்பட்டது. விழாவில் இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா பேசியதாவது:
இந்த போர் விமானம் உள்நாட்டிலேயே தனித்தன்மையோடு பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இதில் ஒரு விமானம் சூலுாருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
படிப்படியாக 15 போர் விமானங்களும் நான்கு பயிற்சி விமானங்களும் வந்து சேரும். இந்திய விமானப்படைக்கு இது புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் இந்திய விமானப்படை சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் முன்னோடியாக இருப்பதால் 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் சர்வதேச அளவில் இந்திய விமானப்படை முன்னணியில் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

எச்.ஏ.எல். நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் மாதவன் கூறியதாவது:பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தில் 'தேஜஸ் எம்.கே-. 1 எப்.ஓ.சி.' ரக விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வான்வெளியில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும்
வசதியை கொண்டுள்ளது.தலா 200 கிலோ எடையில் நான்கு ஏவுகணைகளை பொருத்திக் கொள்ளலாம். பல்வேறு வகையான ஆயுதங்களை இந்த விமானத்தில் ஏற்றிச் செல்லலாம்.விமானத்தின் எடை 7.5 டன். ஆயுதம் உள்ளிட்ட பொருட்களோடு சேர்த்தால் 12.5 டன் எடையை கொண்டிருக்கும். இந்த விமானங்களுக்கு சர்வதேச அளவில் நல்ல கிராக்கி உள்ளது. பல நாடுகள் தாமாக முன்வந்து தங்களது விமானத் தேவைகளை பதிவு செய்துள்ளன. விரைவில் ஏற்றுமதி செய்வது
குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.இவ்வாறு கூறினார்.விழாவையொட்டி சூலுார் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள், ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE