https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547348.jpg

ஊரடங்கால் பாதிப்பு குறைவு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி : 'ஊரடங்கு உத்தரவு அமலால் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. அதைவிட 'கொரோனா' வைரஸ் பரவல் வேகம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான வைரஸ் பாதிப்பு மற்றும் பலி குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 767 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 4,337 பேர்
உயிரிழந்துள்ளனர்.இந்த வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல நன்மைகள் அனுபவங்கள் கிடைத்துள்ளன. அதில் மிக முக்கியமானது வைரஸ் பரவல் வேகம் மிக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலை தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் பரிசோதனை மையங்கள் அமைப்பது மருத்துவமனைகளில் வசதி ஏற்படுத்துவது ஆகியவற்றில் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளோம். இதுவரை 32 லட்சத்து 42 ஆயிரத்து 160 பேருக்கு பரிசோதனை செய்யப்
பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.16 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி ஊரடங்கு உத்தரவால் பாதிப்பு மற்றும் பலி வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டோரில் உயிரிழப்பு விகிதம் நம் நாட்டில் 2.86 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் உலக சராசரி 6.36 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE