கிடப்பில் போடப்பட்ட தரைப்பாலம், தடுப்பணை கட்டுமான பணி: முதல்வருக்கு துரைமுருகன் கடிதம்

by

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுக் கிடப்பில் போடப்பட்ட காங்கேயநல்லூர் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டுமான பணியையும், பொன்னையாற்றில் குகைநல்லூர் அருகே தடுப்பணை கட்டும் பணியையும் விரைவில் நிறைவேற்றித்தர வேண்டும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம், ஆவின் அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. இதேபோல் காட்பாடியில் விஐடி பல்கலைக்கழகம், ரயில் நிலையம், அரசு பல்கலைக்கழகம், தொழிற்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு பகுதிகளுக்கும் பொது மக்கள் 8 கி.மீ சுற்றித்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க சத்துவாச்சாரிக்கும், காங்கேயநல்லூருக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுக்கால கோரிக்கையாகும்.

இதற்கு 2011 திமுக ஆட்சியில் நபார்டு, கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பில் பாலம் கட்டுவதற்கு காங்கேயநல்லூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த தரைப்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் வேலூர், காட்பாடி பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க காங்கேயநல்லூர் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, திமுக பொருளாளரும், காட்பாடி பேரவை உறுப்பினருமான துரைமுருகன் இந்த பாலம் கட்டுவது தொட ர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி,  காங்கேயநல்லூர் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். எனினும், இதுவரை அந்த பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதேபோல், பொன்னையாற்றில் குகைநல்லூர் அருகே தடுப்பணை கட்டும் பணி அறிவிக்கப்பட்டு இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து, திமுக பொருளாளர் துரைமுருகன் தமிழக முதல்வருக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட காங்கேயநல்லூரில் இருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பாலாற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்து 2 நிதிநிலை கூட்டங்கள் வந்து சென்றுவிட்டன. கேட்டால் அதிகாரிகள் ஆய்வில் உள்ளதெனக் கூறுகின்றனர்.

இதேபோல், பொன்னையாற்றில் குகைநல்லூர் அருகே தடுப்பணை கட்டப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதுவும் ஆய்வில் உள்ளது எனக் கூறுகின்றனர். அடுத்த பேரவைத் தேர்தல் வருவதற்கு உள்ளாகவே இந்த இரு திட்டங்களையும் நிறைவேற்றித்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.