http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__842159450054169.jpg

கொரோனாவுக்கு பாதிப்பு, இறப்பு அதிகரிப்பதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? : மாவட்ட ஆட்சியாளர்களுடன் மே 29ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையின் போது, பொது முடக்கம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

*கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை 70 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி மார்ச் 24ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

*அதை தொடர்ந்து மே 4ம் தேதி முதல் 3வது கட்ட ஊரடங்கின்போது, குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதுடன், தனி கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

*ஆனாலும், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் அதிகரித்தபடியே இருந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.

*இதையடுத்து மே 18ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 4வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் பொது போக்குவரத்தான விமானம், ரயில், பேருந்து, ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

*மே 25ம் தேதி முதல் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து தமிழகத்திலும் சில விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் ரயில் போக்குவரத்துக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

*சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி உச்சத்தை தொட்டபடியே உள்ளது.

*இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 4வது கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. விமானம், ரயில், ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் பேருந்து சேவை மற்றும் மின்சார ரயில் சேவை, வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்ய அனுமதி அளிப்பது உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.

*இதுபோன்ற பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா அல்லது தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

*இதற்கு அடுத்தகட்டமாக மருத்துவ நிபுணர்கள் வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில், கொரோனா பாதிப்பு குறித்து மே 29ம் தேதி காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அப்போது தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

*இதையடுத்து தமிழகத்தில் 5ம் கட்டமாக ஜூன் 1ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியிடப்படும். குறிப்பாக, இந்த 5ம் கட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் நோய் அதிகம் பாதித்து வரும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்துகளான பஸ், ரயில் பயணங்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது.

*அதேநேரம், மத்திய அரசும் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் முடிவை பார்த்துவிட்டு, தமிழக அரசு தனது முடிவை வருகிற 30 அல்லது 31ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.